2012-06-13 16:31:56

சிரியா நாட்டுச் சமுதாயம் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்ந்து வருகிறது - திருப்பீடத்தாதர் பேராயர் Zenari


ஜூன்,13,2012. சிரியாவில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் மனித உடல்களை கணக்கிட்டுவிடலாம், ஆனால், அங்கு சிதறுண்டு போகும் மனங்களையும், சீரழியும் மனசாட்சிகளையும் கணக்கிடமுடியாது என்று சிரியாவின் திருப்பீடத்தாதர் பேராயர் Mario Zenari ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.
மனித உயிர்களும், அதன் விளைவாக குடும்பங்களும் அழிந்து வருவதால், சிரியாவின் சமுதாயம் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்ந்து வருகிறது என்று கூறிய பேராயர் Zenari, இச்சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் வேதனையையும், வெறுப்பையும் தீர்க்க பல ஆண்டுகள் ஆகும் என்று எடுத்துரைத்தார்.
தொடரும் இந்த வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அங்குள்ள சிறுவர், சிறுமியரே என்பதைக் கூறிய பேராயர் Zenari, அனைத்துத் தரப்பினரும் தங்கள் சுய நலன்களுக்காக சிறுவர் சிறுமியரைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை Bashar al-Assad தரப்பினர் மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் தன் அண்மைய அறிக்கையில் கூறியுள்ளார்.
நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மட்டுமல்லாமல், ஊடகங்களும் தகவல்கள வெளியிடுவதில் போர்புரிந்து வருவதால், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்புவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்று பேராயர் Zenari ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.