2012-06-12 16:11:18

கர்தினால் ஃபிலோனி அஜெர்பைஜான் நாட்டில் சுற்றுப்பயணம்


ஜூன்12,2012. அருளாளர் 2ம் ஜான் பால், அஜெர்பைஜான் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் பத்தாம் ஆண்டைச் சிறப்பிக்கும்விதமாக, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டுத் தலைநகர் Baku வில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்திய கர்தினால் ஃபிலோனி, அருளாளர் 2ம் ஜான் பால் இந்நாட்டின்மீது கொண்டிருந்த அன்பை விளக்கினார்.
இந்நாட்டில் முன்னர் இருந்துவந்த கடும் அடக்குமுறைகள், 70 ஆண்டுகளாகக் குருக்களுக்கு அனுமதி மறுப்பு, மீட்பின் நற்செய்தியை அறிவிக்கத் தடை, திருஅவைக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் மாண்பிழந்தது மட்டுமல்ல, திருப்பலி நிகழ்த்தத் தடை போன்ற கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அஜெர்பைஜான் கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாய் இருந்த்தைப் பாராட்டவே அருளாளர் 2ம் ஜான் பால் திருப்பயணம் மேற்கொண்டார் என்றார் கர்தினால்.
இந்நாட்டில் வாழும் சுமார் 94 இலட்சம் மக்களில் 450 பேர் கத்தோலிக்கர்.
முன்னாள் சோவியத் யுனியனைச் சேர்ந்த அஜெர்பைஜான் 1991ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் அடைந்த அருளாளர் 2ம் ஜான் பால் திருப்பயணம் 2002ம் ஆண்டு மே மாதத்தில் அஜெர்பைஜானுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.