2012-06-12 16:10:31

உண்மையைப் புறக்கணிக்கும் கலாச்சாரத்தை ஒதுக்கி நடக்குமாறு திருத்தந்தை அழைப்பு


ஜூன்12,2012. இக்காலத்தில் சாத்தானின் மாயக்கவர்ச்சிகளைப் புறந்தள்ளுவது என்பது, உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு கலாச்சாரத்தைப் புறக்கணிக்கப்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“திருஅவையில் திருமுழுக்குத் திருவருட்சாதனம்” என்ற தலைப்பில் உரோம் மறைமாவட்டம் தொடங்கியுள்ள ஆண்டுக் கூட்டத்தில் இத்திங்கள் மாலை உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
“தந்தை, மகன், தூயஆவியின் பெயரால்” என்ற திருமுழுக்குத் திருவருட்சாதனச் சடங்குமுறைகள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, திருமுழுக்கினால் நாம் மூவொரு கடவுளின் வாழ்வில் இருக்கின்றோம், கடவுளுக்கேயுரிய புதிய வாழ்வோடு அவரோடு தனிப்பட்டவிதத்தில் ஒன்றித்திருக்கிறோம், கடவுளில் ஐக்கியமாகி இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இதனால் கடவுள் நமக்கு எட்டாத தூரத்தில் இல்லை, ஆனால் நாம் கடவுளில் இருக்கின்றோம், கடவுள் நம்மில் இருக்கின்றார் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இந்த உறவு கடவுளோடு தொடங்குகிறது என்றும் கூறினார்.
திருமுழுக்கு திருவருட்சாதனம் நம் வாழ்வு முழுவதும் என்றும் இருந்து நம் வாழ்வில் தீமையையும் விலக்குகின்றது என்றும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்தவராக இருப்பது என்பது வெறுமனே “வேண்டாம்” என்று சொல்வதல்ல, மாறாக, விசுவாசப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்து பற்றிய உண்மைகளுக்கு ஆகட்டும் என்று சொல்வதாகும் என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.