2012-06-11 16:45:58

விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் குருக்கள் பயணிகளின் இன்ப, துன்பங்களில் பங்கேற்க வேண்டும் - திருத்தந்தை


ஜூன்,11,2012. உலகில் உள்ள விமானநிலையங்கள் உலக மயமாகிவரும் சமுதாயத்தின் ஓர் அடையாளமாக விளங்குகின்றன என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
புலம் பெயர்ந்தோர், மற்றும் பயணிகளின் மேய்ப்புப்பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை நடத்தும் 15வது அகில உலக கத்தோலிக்கக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகின் பல நாடுகளிலிருந்தும் உறுப்பினர்கள் உரோம் நகர் வந்துள்ளனர்.
ஜூன் 11ம் தேதி இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் 15வது உலகக் கத்தோலிக்க விமானப் பயணிகளின் ஆன்மீகப் பணியாளர்கள் கருத்தரங்கிற்கு வந்திருக்கும் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஆன்மீகப் பணிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
அண்மையக் காலங்களில் விமான நிலையங்கள் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி வருவதைக் குறித்தும் பேசியத் திருத்தந்தை, இந்த ஆபத்துக்களால் மக்களுக்கு மனித சமுதாயத்தின் மீது உள்ள நம்பிக்கை குறைந்துவருவதையும் எடுத்துரைத்தார்.
Loretoவின் மரியன்னையும், கபிரியேல் தூதரும் விமானப் பயணிகளுக்குப் பாதுகாவலர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மனிதகுலத்தின் மகிழ்விலும், துயரத்திலும் மரியன்னை பங்கு கொள்வதுபோல், விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் குருக்களும் பயணிகளின் இன்ப, துன்பங்களில் பங்கேற்க வேண்டும் என்பதைக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.