2012-06-11 16:11:28

வாரம் ஓர் அலசல் – நாம் விரும்பும் வருங்காலம்


ஜூன்11,2012. ஜாக் லாவோன் என்ற சிறுவன் உயர்நிலைப்பள்ளியில் படித்த போது நோயாளி போல மெலிந்து மிக மோசமாகக் காணப்பட்டான். மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு மிகவும் அசிங்கமாகத் தோற்றமளித்த அவனை எல்லாரும் கிண்டல் செய்தனர். எனவே அவன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டான். வாழ்க்கையே இருளாகிப் போனதாக எண்ணி வீட்டில் முடங்கிக் கிடந்தான். அச்சமயம் அவனை ஒரு சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றனர் அக்கம்பக்கத்தார். உடல்நலம் பற்றிய அச்சொற்பொழிவில் உடற்பயிற்சி மூலம் எப்படி நலமாக வாழலாம் என்று விவரிக்கப்பட்டது. அந்தப் பேச்சு சிறுவனைத் தூண்டியது. சிந்திக்க வைத்தது. வீட்டிற்கு வந்தவன் நன்றாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். விடாது தொடர்ந்து செய்தான். கலிபோர்னியா, ஓர்லேண்டு மாநிலங்களில் வீடு வீடாகச் சென்று புதிய உடற்பயிற்சிகள் பற்றி எடுத்துரைத்தான். ஆளுமையில் பக்குவமடைந்த ஜாக் லாவோன், பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற முதல் உடற்பயிற்சி மையத்தைத் தொடங்கினார். “மிஸ்டர் எக்சர்சைஸ்” என்று எல்லாராலும் பாராட்டப் பெற்ற ஜாக் லாவோன் இன்று தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் சாதனையாளர், கோடீஸ்வரர் என்ற நிலையில் உள்ளார். ஜாக் லாவோன் வாழ்க்கை பற்றிப் பகிர்ந்து கொண்ட ஒரு நூல் ஆசிரியர் எம்.ஞானசேகர் என்பவர் சொல்கிறார்
“நல்ல உரையாடல்களோ, நல்ல சம்பவங்களோ, நல்ல புத்தகங்களோ அல்லது நல்ல பொன்மொழிகளோகூட மனிதர்களது மனதை மாற்றி அவர்களை அடையாளம் காட்டலாம். நமது இன்றையத் தேவை நல்ல சூழ்நிலைகள்”
அன்பர்களே, நாம் எல்லாரும் விரும்பும் நல்லதோர் எதிர்காலத்திற்கு, நல்ல சூழ்நிலைகளை அமைக்கக்கூடிய, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய செயல்திட்டங்கள் தேவை. இம்மாதம் 20 முதல் 22 வரை பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில், நிலையான வளர்ச்சி குறித்த உச்சி மாநாட்டை ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தவிருக்கிறது. இம்மாநட்டில் 135 நாடுகளின் தலைவர்கள் உட்பட ஐம்பதாயிரத்துக்கு அதிகமானோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். 1992ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நோக்கத்தில், அம்மாநாடு நடந்த இருபது ஆண்டுகள் கழித்து, இந்த 2012ம் ஆண்டு ஜூனில் ரியோ+20 என்ற பெயரில் உறுதியான வளர்ச்சி பற்றிய மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாடு குறித்துப் பேசிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், பொதுமக்கள் சமுதாயம் எத்தகையதோர் எதிர்காலத்தை அடைய விரும்புகிறது என்பது பற்றி இணையதளத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுள்ளார். இக்காலத்தில் இந்த உலகத்திற்கு மிகவும் தேவைப்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்குப் பொதுமக்கள் எத்தகைய தீர்வுகளை எதிர்நோக்குகின்றனர் என்பது குறித்த பரிந்துரைகளை vote.riodialogues.org என்ற முகவரியில் பதிவு செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளார். ஜூன் 15, வருகிற வெள்ளிக்கிழமை இதற்கான இறுதி நாள் என்றும், அராபியம், ஆங்கிலம், சீனம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், இரஷ்யம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் பொதுமக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரியோ+20 என்ற மாநாடு குறித்துப் பேசிய இம்மாநாட்டின் பொதுச்செயலர் Sha Zukang, “உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி உள்ளனர். அதேவேளை, உலகின் 20 விழுக்காட்டு மக்கள், 80 விழுக்காட்டு வளங்களை உறிஞ்சுகின்றனர். இந்நிலையில் இம்மாநாடு மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
வளமையான, சமத்துவமிக்க, நிலையான மற்றும் உறுதியான உலகம் எல்லாருக்கும் தேவை. இம்மாதிரியான உலகம் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தேவை. ஆனால், இக்காலத்திய ஐரோப்பிய கடன் நெருக்கடி, உலகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த நெருக்கடியால் ஐரோப்பிய நாடுகள் எடுத்துவரும் சிக்கன நடவடிக்கைகள் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் “பசுமைப் பொருளாதாரம் (green economy)” என்ற பெயரில் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து வருகிறது. சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமல் அனைத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தில் ஒரு சமமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் முயற்சித்து வருகிறது. இந்தப் பசுமைப் பொருளாதாரம் பற்றிப் பேசிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், “நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பசுமைப் பொருளாதாரம், ஒவ்வோர் ஆண்டும் சுமார் எட்டுக்கோடி இளையோர் தரமான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உதவ வேண்டும். சமூக முன்னேற்றத்துக்கும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் கல்வி மிகவும் முக்கியமானது. எந்த ஒரு சமுதாயத்தையும் உறுதியாகக் கட்டியெழுப்புவதற்கு கல்வி மிகவும் இன்றியமையாதது” என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறா RealAudioMP3 ர். பாகிஸ்தானில் மட்டும் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லக்கூடிய வயதுடைய சுமார் 73 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை என்று யுனிசெப் நிறுவனம் கூறியது.
இந்தப் பசுமைப் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சிக்குப் புதிய உந்துதல் கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், WWF என்ற உலக வனப் பாதுகாப்பு அமைப்பு, “நாம் வாழும் உலகம் 2012” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், இந்தப்பூமி தொடர்ந்து உற்பத்தி செய்யும் இயற்கை வளங்களைவிட 50 விழுக்காட்டுக்குமேற்பட்ட வளங்களை நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம் எனவும், இது இந்தப் பூமியின் பல்வகை உயிரினங்களின் இருப்புக்குப் பெருமளவில் அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் எச்சரித்துள்ளது. இப்பூமியின் நிலப்பரப்பில் எழுபது விழுக்காடு பெருங்கடல்கள். இந்தப் பெருங்கடல்கள், உலகினரின் உணவுக்கும் மருந்துக்கும் முக்கிய வளமாக இருந்து வருகின்றன. எண்ணெய், மக்னீசியம், தாமிரம் உட்பட கனிம வளங்கள் நிறைந்ததாயும், தொடர்ந்து எண்ணெய் எடுக்கப்படும் இடங்களாகவும் இருந்து வருகின்றன. அதேநேரம், கடல்புற்கள், கடல்தாவரவகைகள், பவளப்பாறைகள் என கடல்சார்ந்த சுற்றுச்சூழல் 30 முதல் 35 விழுக்காடுவரை அழிக்கப்பட்டுவிட்டன. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வைத் தொடர்ந்து பறித்து வருகின்றன. அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்கேடு, கடல்தண்ணீரை பிராணவாயு அற்ற நீராக மாற்றி வருகின்றது. எனவே நிலையான வளர்ச்சிக்குச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது அவசியம் என்று அனைத்துலக கடல்சார்ந்த அமைப்பின் பொதுச்செயலர் Nii Odunton கூறுகின்றார்.
RealAudioMP3 உறுதியான வளர்ச்சிக்கு ஏழ்மையை அகற்றுவதும் இன்றியமையாதது எனப் பசுமைப் பொருளாதாரத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் இன்று ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே 50 இலட்சம் சிறார் பசியால் மடிகின்றனர். உலகில் ஒவ்வொரு 3.6 வினாடிகளுக்கும் ஒருவர் வீதம் பசியால் இறக்கின்றனர். உலகில் பசியால் வாடும் மக்களில் சுமார் பாதிப்பேர் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ளனர். ஓர் ஏவுகணைக்கு ஆகும் செலவை வைத்து ஒரு பள்ளியின் சிறார் அனைவரும் ஒவ்வொரு நாளும் 5 வருடங்களுக்கு மதிய உணவு உண்ண முடியும். உலக மக்களில் சுமார் நான்கு பேருக்கு ஒருவர் வீதம் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்குக் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். 358 கோடீஸ்வரர்களின் மொத்தச் சொத்து, உலக மக்களில் 45 விழுக்காட்டினரைக் கொண்டுள்ள நாடுகளின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமாகும். இவ்வாறெல்லாம் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
பசி என்று வந்துவிட்டால் அது எவரையும் விட்டுவைப்பதில்லை. 'திரிசங்கு சொர்க்கம்’ என்று தனியாக ஒரு சொர்க்கத்தையே படைக்கக்கூடிய சக்தி படைத்த விஸ்வாமித்திர முனிவரையே பசி ஆட்டிப் படைத்ததாம். அவர் ஒரு விலங்கின் மாமிசத்தைச் சாப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது. 'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’. ஆமாம். பசி வந்தால், மானமும் சுயமரியாதையும்கூட காணாமற்போகும். பசி வந்துவிட்டால், சாதியும் மதமும், மொழியும், சமூக அஸ்தஸ்தும் மறைந்து போகும். இதைத்தான் நல்வழி நூலும், “மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை, தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின், கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்” என்று சொல்கிறது.
அன்பர்களே, ரியோ+20 மாநாடு நாம் அனைவரும் எதிர்பார்க்கும், பசிக்கொடுமை இல்லாத, கல்வியறிவு நிரம்பப்பெற்ற, சுற்றுச்சூழல் மாசு அடையாத, இயற்கை வளங்கள் சுரண்டப்படாத, ஆயுத அச்சுறுத்தல் இல்லாத, எல்லாரும் சமமாக, மாண்புடனும், அடிப்படை உரிமைகளுடனும் மதிக்கப்படும் உலகை அமைக்க வழிசெய்யும் என நம்புவோம். இத்தகைய உலகை ஐ.நா.தான் அமைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிராமல் நாம் ஒவ்வொருவருமே இந்த நொடிப்பொழுதிலிருந்து செயல்படத் தொடங்குவோம். முதலில் சிறிய வட்டத்தில் சிறுசிறு காரியங்களில் ஈடுபடுவோம்.
“பரிதாபப்படும் நிலையில் இருப்பதைவிட மற்றவர்கள் பொறாமைப்படும்படியான நிலையில் இருப்பது நல்லது” என்றார் ஹெரோடோஸ். நமது வத்திக்கான் வானொலிக் குடும்பத்தினர் நல்லபலக் காரியங்களைச் செய்து மற்றவர் நம்மைப் பார்த்துப் பெருமிதம் கொள்ளும் நிலையில், நேர்மறைச்சிந்தனையுடன் பொறாமைப்படும் நிலையில் வாழுவோம். அந்த மைதானத்தின் இருபக்கங்களிலும் புல்லும் கொள்ளும் பச்சைப் பசேலென்று செழித்திருந்தன. அங்கு குதிரை ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஆடு, அடுத்த ஆட்டிடம், இந்தக் குதிரைகள் புல்லையோ கொள்ளையோ கொஞ்சம்கூடத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றனவே, உனக்கு இது வியப்பாக இல்லையா? என்று கேட்டது. அதற்கு அடுத்த ஆடு, “போட்டிக் குதிரைகள் அப்படித்தான். வெல்லப் பாயும் குதிரைப் புல்லைப் பார்க்குமா, கொள்ளைப் பார்க்குமா?” என்றது (காசி ஆனந்தன்). அன்பர்களே நாமும் நாம் விரும்பும் எதிர்காலத்தை அமைக்கும் இலக்குகளில் உறுதியாக இருப்போம்.







All the contents on this site are copyrighted ©.