2012-06-11 16:46:10

புதிய வடிவங்களில் நற்செய்தியைப் பரப்பும் பணிகளுக்கு நாம் தொடர்ந்து அழைக்கப்படுகிறோம் - கர்தினால் Antonio Maria Vegliò


ஜூன்,11,2012. விசுவாச ஆண்டைத் துவக்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், கிறிஸ்துவோடு நாம் மேற்கொள்ளும் விசுவாசப் பயணத்தில் ஆற்றவேண்டிய கடமைகளைச் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில் இத்திங்களன்று துவங்கிய 15வது உலகக் கத்தோலிக்க விமானப் பயணிகளின் ஆன்மீகப் பணியாளர்கள் கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய புலம் பெயர்ந்தோர், மற்றும் பயணிகளின் மேய்ப்புப்பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò இவ்வாறு கூறினார்.
உலகின் கடையெல்லை வரை நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கும் திருஅவையின் கண்கூடான அடையாளங்களாக விளங்குபவர்கள் விமானப் பயணிகளின் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று கர்தினால் Vegliò சுட்டிக் காட்டினார்.
உலகின் பல விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயங்களும், அங்கு திருநற்கருணை வடிவில் பிரசன்னாகியிருக்கும் இறைமகன் இயேசுவும் விமானப் பயணிகளுக்கு வழங்கிவரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò, புதிய வடிவங்களில் நற்செய்தியைப் பரப்பும் பணிகளுக்கு நாம் தொடர்ந்து அழைக்கப்படுகிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.