2012-06-11 16:46:41

50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள கர்தினால் Marc Ouellet ஆற்றிய மறையுரை


ஜூன்,11,2012. அயர்லாந்து பல நூற்றாண்டுகளாகக் கத்தோலிக்க விசுவாசத்தில் ஊறிய ஒரு நாடு என்றும், இயற்கைவளங்கள் பலவும் நிறைந்த இந்நாடு, உயர்வான கலாச்சாரப் பரம்பரைக்கும், விருந்தோம்பலுக்கும் புகழ்பெற்ற ஒரு நாடு என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் துவங்கிய 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள ஆயர்கள் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Marc Ouellet, துவக்கத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்க விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள அயர்லாந்து, உலகெங்கும் இந்த விசுவாசத்தை விதைக்க தன் மக்களை நற்செய்திப் பணியாளர்களாக அனுப்பியுள்ளது என்று கர்தினால் Ouellet தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் கத்தோலிக்க விசுவாசிகள் கூடி வந்துத் திருப்பலியில் கலந்து கொள்வது, ஒரு சாதாரண சமுதாயக் கூட்டமாக உலகத்தின் கண்களுக்குத் தெரிந்தாலும், இந்த விசுவாச செயல்பாட்டில் அடங்கியுள்ள மேலான உண்மைகளை நாம் அறிவோம் என்று கர்தினால் Ouellet எடுத்துரைத்தார்.
அயர்லாந்தின் நான்கு உயர்மறைமாவட்டங்களிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் 12,500க்கும் அதிகமான கத்தோலிக்க விசுவாசிகள் கலந்து கொண்ட திருப்பலியில் Toronto பேராயர் கர்தினால் Thomas Collins உட்பட, பல பேராயர்கள் கூட்டுத் திருப்பலியாற்றினர்.








All the contents on this site are copyrighted ©.