2012-06-08 16:50:53

இளைஞர்: அடுத்த மாற்றத்துக்கான அலை- அனைத்துலகப் பெருங்கடல் நாள்


ஜூன்,08,2012. கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு முயற்சியாக, ஜூன் 8ம் தேதி, அனைத்துலகப் பெருங்கடல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. “இளைஞர்: அடுத்த மாற்றத்துக்கான அலை” என்பது இவ்வாண்டின் மையக்கருத்து.
பூமிகோளத்தின் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில் 97 விழுக்காடு கடல் நீராக உள்ளது. கடலால் மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது.
தற்போதைய கடலின் நிலை இதற்கு முன் இல்லாத அளவிற்கு, பிரச்னைகளைச் சந்திக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 விழுக்காடு கடல் மூலமாக உருவாகிறது. நமக்குத் தேவையான குடிநீரும் கடல் நீர் ஆவியாவதன் மூலம் கிடைக்கிறது.
உலகில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு, மருத்துவம், வருமானம் ஆகியவற்றுக்காக கடலை நம்பி உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. இன்று கடல்களின் பல பகுதிகளில் கழிவு நீர் கலப்பதாலும், எண்ணெய் கப்பல்கள் அவ்வப்போது கவிழ்வதாலும் கடல் நீர் பாதிக்கப்பட்டு, உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. 20 விழுக்காடு பவளப்பாறைகள் அழிந்து விட்டன. மேலும் 20 விழுக்காடு பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.