2012-06-08 16:50:16

ஓடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் தங்களைக் கிறிஸ்துவிடமிருந்து பிரித்துவிட முடியவில்லை - கட்டக் புபனேஸ்வர் பேராயர்


ஜூன்,08,2012. இந்தியாவின் ஓடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் தங்கள் விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்தியதே தவிர, தங்களைக் கிறிஸ்துவிடமிருந்து பிரித்துவிட முடியவில்லை என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
ஜெர்மனியில் உள்ள Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் தலைமையகத்தில் உள்ளவர்களை அண்மையில் சந்தித்த பேராயர் பார்வா, ஓடிசாவில் தான் காணும் கத்தோலிக்க விசுவாச வளர்ச்சியைக் குறித்து பேசினார்.
ஐந்து கத்தோலிக்க மறைமாவட்டங்களை உள்ளடக்கிய ஓடிஸா மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் தான் 33 இளையோரை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தியதை மகிழ்வுடன் சுட்டிக்காட்டிய பேராயர் பார்வா, அம்மாநிலத்தில் கிறிஸ்துவ சமுதாயம் உறுதியாகக் கட்டி எழுப்பப்படுவதற்கு இன்னும் அதிக முயற்சிகள் தேவை என்பதையும் கூறினார்.
ஓடிஸா மாநிலத்தில், முக்கியமாக கந்தமால் பகுதியில் 2007ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளன்று இந்து அடிப்படை வாதக் கும்பலால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நிலையை அடைந்தது. இந்த வன்முறைகளால் 100 பேருக்கும் மேல் உயிரிழந்தனர், 5000 வீடுகளும், கிறிஸ்தவ கோவில்களும், நிறுவனங்களும் தாக்கப்பட்டன, 50000 க்கும் அதிகமானோர் அப்பகுதியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.