2012-06-07 15:19:33

உலக அரசுகள் வறுமையை ஒழிக்கும் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்


ஜூன்,07,2012. விரைவில் துவங்கவிருக்கும் Rio+20 பூமிக்கோள உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில், உலக அரசுகள் வறுமையை ஒழிக்கும் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள பூமிக்கோள உச்சி மாநாட்டினைப் பற்றி செய்தியாளர்களிடம் இப்புதனன்று பேசிய பான் கி மூன், தற்கால சந்ததியினர் தங்கள் வாழ்நாளில் காணவிருக்கும் இந்த முக்கிய நிகழ்வின் தாக்கம் அனைவரையும் சரிவர சென்றடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
1992ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற முதல் பூமிக்கோள உச்சி மாநாட்டின்போது இயற்கை வளங்களையும், எரிசக்தியையும் சரிவர பயன்படுத்தும் திட்டங்களுக்கு உலக அரசுகள் உறுதி அளித்தன. அந்த உறுதிகளுக்கு ஏற்ப கடந்த 20 ஆண்டுகள் கடந்துள்ளனவா என்பதை வருகிற உச்சி மாநாடு தீர்மானிக்கும் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
அரசுகள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து உழைத்தாலே நமது பூமிக் கோளத்தைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று பான் கி மூன் எச்சரிக்கை விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.