2012-06-06 15:37:43

அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் அகிலஉலகத் திருநற்கருணை மாநாடு அந்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் - திருப்பீட அதிகாரி


ஜூன்,06,2012. அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் அகிலஉலகத் திருநற்கருணை மாநாடு அந்நாட்டிற்கும், அனைத்துலகிற்கும் ஒரு திருப்பு முனையாக, விசுவாசத்தைத் தூண்டும் கருவியாக அமையும் என்று தான் நம்புவதாக திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 10ம் தேதி, வருகிற ஞாயிறன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டில் திருத்தந்தையின் சார்பில் கலந்துகொண்டு, துவக்கத் திருப்பலியை ஆற்றும் ஆயர்களின் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக அயர்லாந்து திருஅவை சந்தித்தப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவற்றிலிருந்து பாடங்களைப் பயிலவும், தொடர்ந்து தனது விசுவாசப் பயணத்தை மேற்கொள்ளவும் இந்தத் திருநற்கருணை மாநாடு தூண்டுதலாக அமையும் என்று கர்தினால் Ouellet எடுத்துரைத்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 49வது அகில உலக திருநற்கருணை மாநாடு கனடாவின் Quebec நகரில் நடைபெற்றபோது, அங்கு பேராயராக இருந்து மாநாட்டை நடத்திய கர்தினால் Ouellet, கடவுள் பற்றற்ற வழியில் திரும்பியிருந்த கனடா நாட்டுக்கு 49வது மாநாடு பல பாடங்களைச் சொல்லித்தந்தது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.