2012-06-05 15:20:57

நைஜீரியாவில் நிகழ்ந்த துயர நிகழ்வுகள் தலத்திருஅவையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - ஆயர் பேரவையின் தலைவர்


ஜூன்,05,2012. இஞ்ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்கள் நைஜீரியாவில் நிகழ்ந்த துயர நிகழ்வுகள் தலத்திருஅவையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
ஜூன் 3, இஞ்ஞாயிறன்று Lagos நகருக்கருகே ஏற்பட்ட விமான விபத்தில் 153 பேர் கொல்லப்பட்டனர், இதைத் தொடர்ந்து, இத்திங்களன்று Bauchi நகரில் வாகன வெடிகுண்டு மூலம் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்விரு நிகழ்வுகளையும் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவரும், Jos பேராயருமான Ignatius Ayau Kaigama, நைஜீரியாவில் தொடந்து நிகழும் தீவிரவாதத் தாக்குதல்களும், ஆயுதம் தாங்கிய கொள்ளைகளும் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் என்று கூறினார்.
நாட்டில் அமைதி நிலவுவதற்காக இஞ்ஞாயிறன்று நடைபெற்ற நாடுதழுவிய கத்தோலிக்கத் திருப்பயணத்தில் கலந்து கொள்ள பேராயர் Kaigamaவும் இன்னும் மற்ற ஆயர்களும் தலைநகர் Abujaவுக்கு வந்திருந்ததாகவும், இத்திருப்பயணத்தின் இறுதியில் ஆயர்கள் அரசுத் தலைவர் Goodluck Jonathan அவர்களைச் சந்தித்ததாகவும் பேராயர் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுத்தலைவருடன் ஆயர்கள் மேற்கொண்ட சந்திப்பில் நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன என்றும், இச்சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்றும் பேராயர் Kaigama தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.