2012-06-05 15:19:21

குவாத்தமாலா கர்தினால் கெசாதா தொருனோ இறைவனடி சேர்ந்தார், திருத்தந்தை இரங்கல்


ஜூன்,05,2012. மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலா கர்தினால் Rodolfo Quezada Toruño இறைபதம் அடைந்ததையொட்டி தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Santiago de Guatemala நகரின் முன்னாள் பேராயராகிய கர்தினால் கெசாதா தொருனோ அவர்கள் அகிலத் திருஅவைக்கும், தலத்திருஅவைக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அருஞ்சேவைகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குவாத்தமாலாவின் 36 வருட உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வருவதற்கு இடைநிலை வகித்த கர்தினால் கெசாதா தொருனோவின் பங்கு குறிப்பிடும்படியானது. 1990களில் அந்நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இவர் முக்கிய அங்கம் வகித்தார்.
“தூய்மையிலும் தங்களது சொந்த வாழ்க்கையிலும் தங்களது அழைப்பைக் கண்டுணரும் உண்மையான விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களை நாம் அதிகமாகக் கொண்டிருக்கும்வரை மனிதாபிமானமும் நீதியும் நிறைந்த சமுதாயத்தை நாம் கொண்டிருப்போம்” என்று சொல்லியிருப்பவர் இறந்த கர்தினால் கெசாடா தொருனோ.இத்திங்களன்று இறைபதம் சேர்ந்த கர்தினால் கெசாதா தொருனோ, 2003ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். கடந்த மார்ச் 8ம் தேதி தனது 80வது வயதை நிறைவு செய்துள்ளார் கர்தினால் கெசாதா தொருனோ.







All the contents on this site are copyrighted ©.