2012-06-05 15:21:09

Tiananmen அடக்கு முறைகளின் 23ம் ஆண்டு நினைவுக் கூட்டத்தில் 1,80,000 மக்கள்


ஜூன்,05,2012. 1989ம் ஆண்டு சீனாவின் Tiananmen சதுக்கத்தில் சீன அரசால் மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் 23ம் ஆண்டு நினைவுக் கூட்டம் ஹாங்காங் பகுதியில் உள்ள விக்டோரியா பூங்காவில் இத்திங்களன்று நடைபெற்றபோது, 1,80,000 மக்கள் கலந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை கூடிவருவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
1989ம் ஆண்டு Tiananmen சதுக்கத்தில் நடைபெற்ற இளையோர் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, இராணுவ பீரங்கி வண்டி கால்களில் ஏறியதால் இரு கால்களையும் இழந்த Fang Zheng என்பவர் இக்கூட்டத்தில் உரையாற்றியபோது, ஹாங்காங் மக்கள் சீன மக்கள் மனசாட்சியின் குரலாகச் செயல்படுகின்றனர் என்பதை எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கல்லூரிகளில் பயிலும் இளையோர் என்பது தனக்கு மிகவும் மன நிறைவைத் தருகிறது என்று Fang Zheng மேலும் கூறினார்.
விக்டோரியா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்னர், கத்தோலிக்கர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்து ஒரு செப வழிபாட்டை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது. இக்கூட்டத்தில் 20 விழுக்காட்டினர் சீனாவின் மத்திய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.