2012-06-02 14:58:51

போரினால் பாதிக்கப்படும் சிறாருக்கென செபம்


ஜூன்02,2012. போரினால் பாதிக்கப்படும் சிறாருக்கான அனைத்துலக நாள் ஜூன் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படும்வேளை, இஞ்ஞாயிறன்று இச்சிறாருக்காகச் சிறப்பாகச் செபம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது ஒரு பிரிட்டன் அமைப்பு.
இச்சிறாருக்கென செபிப்பதற்குச் செயலில் இறங்கியுள்ள CAAT என்ற ஆயுத வியாபாரத்துக்கு எதிரான கிறிஸ்தவ அமைப்பு, உலகெங்கும் இடம்பெறும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத வியாபாரத்தால் போர்கள் நிரந்தரமாக்கப்படுகின்றன என்று குறை கூறியது.
உலகில் ஆயுதங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான பிரிட்டன், உலகளாவிய ஆயுத வியாபாரத்துக்குப் பெரிய அளவில் ஆதரவு வழங்குவதாகவும், Bahrain, சவுதி அரேபியா, லிபியா உட்பட இவ்வாண்டில் கடும் வன்முறை அடக்குமுறைகள் இடம்பெற்ற நாடுகளுக்கு ஆயுத வியாபாரம் செய்து, அவ்வியாபாரத்தை ஊக்குவித்தது என்றும் CAAT அமைப்பு கூறியது.
இதற்கிடையே, அமைதியான உலகை உருவாக்கவும், ஆயுத வியாபாரத்தை நிறுத்தவும் விண்ணப்பித்து பிரிட்டன் கிறிஸ்தவ சபைகள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.