2012-06-02 14:57:51

திருத்தந்தை : குடும்பம் மனித சமுதாயத்தின் உண்மையான மூலதனம்


ஜூன்02,2012. அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டை மக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கொண்டுவருவதற்கு கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்களது கிறிஸ்தவ விழுமியங்கள் மற்றும் சக்தியினால் உதவுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மனிதர் தனக்குத்தானே வாழாமல் பிறரோடு உறவுகொண்டு வாழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஒருவர் குடும்பத்தில் முதலில் அனுபவிக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, அண்மையில் வட இத்தாலியில் இரண்டு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுமாறும் அழைப்பு விடுத்தார்.
இவ்வெள்ளி மாலை மிலான் சென்றடைந்த திருத்தந்தை, அந்நகர்ப் பேராலய வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவக் குடும்பத்தின் மீது வருங்காலத்தை உருவாக்குமாறும் பரிந்துரைத்த அவர், நமக்காக இறந்து உயிர்த்து நம் மத்தியில் வாழ்ந்துவரும் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கை, மக்களின் வாழ்க்கை முழுவதையும் வழிநடத்த வேண்டும் என்றும் கூறினார்.
4ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான மிலான் நகரப் புனிதர்களையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, குடும்பம் மனித சமுதாயத்தின் உண்மையான சொத்து எனவும், அது, மனிதருக்கு ஆதரவாக இருக்கும் உண்மையான அடையாளம் மற்றும் நிலையான கலாச்சாரம் என்றும் கூறினார்.
மிலானில் இப்புதன் முதல் நடைபெற்று வரும் ஏழாவது குடும்ப மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். “குடும்பம் : வேலையும், கொண்டாட்டமும்” என்ற தலைப்பில் இந்த 5 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது.








All the contents on this site are copyrighted ©.