2012-06-02 14:58:05

சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைச் செயல்களுக்குத் திருப்பீட அதிகாரி கண்டனம்


ஜூன்02,2012. சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைச் செயல்களுக்கு, குறிப்பாக El-Houlehவில் அண்மையில் இடம்பெற்ற கொலைகளுக்குத் திருப்பீட பிரதிநிதிகள் குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கின்றது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
சிரியா அரபு குடியரசில் சீரழிந்துவரும் மனித உரிமைகள் மற்றும் El-Houleh ல் அண்மையில் இடம்பெற்ற கொலைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அமர்வில் பேசிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் தொமாசி, எண்ணற்ற சிறார் உட்பட அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவது, திருத்தந்தையையும் உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தையும் பெருந்துன்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்று கூறினார்.
சிரியாவில் வன்முறையும் இரத்தம் சிந்துதலும் நிறுத்தப்பட்டு, ஒருவரையொருவர் மதித்தல், உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கானப் பாதையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுப்பதை இந்நாளில் தானும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்தார் பேராயர் தொமாசி.








All the contents on this site are copyrighted ©.