2012-06-01 16:04:24

சிரியாவில் பன்னாட்டு அளவிலானத் தாக்குதலைத் தவிர்க்குமாறு கர்தினால் டர்க்சன் வேண்டுகோள்


ஜூன்01,2012. தனது குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் அரசின் முதல் கடமையாக இருப்பதால், சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தீவீரமாக முயற்சித்து வரும் ஐ.நா.சிறப்புத் தூதர் Kofi Annan விடுத்துவரும் அழைப்புக்கு சிரியா அரசு செவிசாய்க்குமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
லிபியாவில் நடைபெற்றது போல, மற்றுமொரு சர்வதேச அளவிலான போர் சிரியாவிலும் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்குமாறு கேட்டுள்ளார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன்.
அமைதியைக் கட்டியெழுப்பும் கத்தோலிக்கருக்கு எழுந்துள்ள புதிய சவால்கள் என்ற தலைப்பில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், அமைதியைக் கட்டியெழுப்பும் கத்தோலிக்க கூட்டமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டு நோத்ரு தாம் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு அமைதி குறித்த ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து இத்திருப்பீட அவை நடத்திய கருத்தரங்கின் இறுதியில் நிருபர் கூட்டத்தில் பேசிய போது இவ்வாறு கூறினார் கர்தினால் டர்க்சன்.
திருத்தந்தை அருளாளர் 23ம் அருளப்பர் எழுதிய “உலகில் அமைதி” என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு 2013ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருப்பதை முன்னிட்டு நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், நைஜீரியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், உகாண்டா, சொமாலியா, மியான்மார், கொலம்பியா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிரியா அரசு, அனைத்துலகச் சமூகத்தின் முயற்சிகளை மதிக்குமாறும், அந்நாட்டில் தூதரக வழியில் அமைதியைக் காண முயற்சிக்குமாறும் கேட்டுக்கொண்ட கர்தினால் டர்க்சன், குண்டுவீச்சுத் தாக்குதல்களும் போரும் படைவீரர்களையும் குடிமக்களையும் பாகுபாடின்றி கொலை செய்கின்றன என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.