2012-05-31 15:51:22

"கத்தோலிக்க வழியில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் சந்திக்கும் புதிய சவால்கள்" – வத்திக்கான் கருத்தரங்கு


மே,31,2012. போர்களாலும் உள்நாட்டுப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் கத்தோலிக்கத் திருஅவை அமைதியை நிலைநாட்ட எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"கத்தோலிக்க வழியில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் சந்திக்கும் புதிய சவால்கள்" என்ற தலைப்பில் இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த திருப்பீட அமைதி மற்றும் நீதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
தெற்கு சூடான், பிலிப்பின்ஸ், காங்கோ, மத்திய கிழக்குப் பகுதி, மத்திய அமெரிக்கா ஆகிய பல பகுதிகளில் நீதியையும் அமைதியையும் கொணர கத்தோலிக்கத் திருஅவை ஒரு முக்கிய கருவியாகச் செயல்பட்டுள்ளது என்று கர்தினால் டர்க்சன் வலியுறுத்திக் கூறினார்.
அண்மைக் காலங்களில் அமைதி மிகவும் சீர்குலைந்துள்ள பகுதிகளான நைஜீரியா, இலங்கை, உகாண்டா, சொமாலியா, காங்கோ குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில் வன்முறைகளைக் களைந்து, ஒப்புரவை வளர்க்கும் வழிகள் ஆராயப்பட்டன என்று கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
'உலகில் சமாதனம்' என்று பொருள்படும் Pacem in terris என்ற சுற்றுமடலை அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் வெளியிட்ட 50ம் ஆண்டைக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், கத்தோலிக்கத் திருஅவை உலகெங்கும் அமைதியின் கருவியாகச் செயல்படும் வழிகள் இக்கருத்தரங்கில் பேசப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.