2012-05-31 15:51:41

அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர்: 12 நொடிகளுக்கு ஒரு குழந்தை இவ்வுலகில் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றது


மே,31,2012. ஒவ்வொரு நாளும் 12 நொடிகளுக்கு ஒரு குழந்தை இவ்வுலகில் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றது என்று அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் Óscar Rodríguez Maradiaga கூறினார்.
ஜூன் மாதம் முதல் தேதியும் இரண்டாம் தேதியும் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற உள்ள அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் கருத்தரங்கைக் குறித்து இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் Maradiaga, உலகின் பசியைப் போக்கும் வழிகள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
‘உலகப் பசியும் உணவு பாதுகாப்பும்’ என்ற கருத்தில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் உணவு பற்றாக்குறையால் உலகெங்கும் அவதியுறும் 92 கோடியே 50 இலட்சம் மக்களின் துயர் துடைக்கும் வழிகளைப் பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் Maradiaga எடுத்துரைத்தார்.
அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், மனிதநலப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர், உலக அளவில் திட்டங்கள் வகுப்போர் என்று பலத் துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கில் உலகப்பசிக்குக் காரணமாக விளங்கும் அரசியல் அநீதிகளும் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பசியை நீக்குவது நடைமுறைக்கு ஒவ்வாத கனவு என்று கூறிவரும் இவ்வுலகின் எண்ணங்களுக்கு எதிராக, இந்த இலக்கு அடையக்கூடிய ஒன்று என்பதை உலகிற்கு அறிவிக்கும் ஒரு முக்கிய பணியில் காரித்தாஸ் ஈடுபட்டுள்ளது என்று அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் செயலர் Christoph Schweifer கூறினார்.








All the contents on this site are copyrighted ©.