2012-05-30 16:05:12

மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் அகில உலக மாநாட்டைப் பற்றிய தகவல்கள்


மே,30,2012. திருமண உறவில் நீடித்து, குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் குடும்பங்களே உறுதியான, நிலையான மகிழ்வுக்கு வழிவகுக்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 30, இப்புதன் முதல் வருகிற ஞாயிறு வரை இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் அகில உலக மாநாட்டைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பீட குடும்ப அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli இவ்வாறு கூறினார்.
குடும்பம் என்ற எளியதோர் உண்மையை உலகறியச் செய்யும் இச்சிறப்பான நிகழ்வுக்கு கடந்த மூன்று ஆண்டுகள் ஏற்பாடுகள் நிகழ்ந்தன என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola எடுத்துரைத்தார்.
இம்மாநாட்டின் சிறப்பு அம்சங்களைச் செய்தியாளர்களிடம் விளக்கிய கர்தினால் Scola, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் 7000க்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்வதற்கு மிலான் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பங்கு தளங்களிலிருந்து 4500க்கும் அதிகமான விருப்பப் பணியாளர்கள் முன் வந்துள்ளனர் என்று கூறினார்.
சுயநலத்தில் ஊறி, தன்னை மட்டுமே காணும் மனிதர்களின் உள்நோக்கியப் பார்வைக்கு ஒரு மாற்றாக, பிறரைக் காணும் வெளிநோக்கியப் பார்வையை மனிதர்களில் வளர்க்க இந்த மாநாடு பெரிதும் உதவும் என்று தான் நம்புவதாகவும் இவ்வுலக மாநாட்டினை முன்னின்று நடத்தும் மிலான் பேராயர் கர்தினால் Scola செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
குழந்தைகளுக்கும், இளையோருக்கும் தனிப்பட்ட வகையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு பொதுக் கூட்டம் இந்த மாநாட்டின் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும், வாழ்வைப் பேணிக் காக்க வேண்டும் என்ற மையக்கருத்துடன் அமையும் இந்தக் கூட்டம் மிலான் நகரின் ஒரு பெரும் பூங்காவில் நடத்தப்படும் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.