2012-05-29 15:36:58

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 123


RealAudioMP3 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் ஒடிஸா, கந்தமால் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். 2007, டிசம்பர் 24 நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு வழிபாட்டுக்காகக் குழுமியிருந்த இறைமக்களை தர்மசேனா என்ற இந்துத்துவ மதவாத அமைப்பினர் தாக்கினர். இத்தாக்குதலில் விளைந்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பற்றி வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களிலிருந்து நாம் அறிந்துகொண்டோம். அவை நம் மனதைவிட்டு நீங்கியிருக்க வாய்ப்பில்லை. இத்தாக்குதலில் தப்பித்த தெரசாவின் சகோதரிகள் (CSST) சபையைச் சேர்ந்த அருட்சகோதரி ப்ரீத்தா என்பவரிடம், இது நடந்து ஓராண்டு கழித்து, இப்போது சூழல் எவ்வாறு உள்ளது என்று கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்:
“ஒரு வருடமாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடந்த வன்முறை தாக்குதல்களுக்கு எதிரானக் கண்டனங்களும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் கண் துடைப்பாகத்தான் தெரிகின்றன. அதே சமயத்தில், இறைமக்கள் மத்தியில் எப்போது, என்ன நடக்குமோ என்ற பதட்டம் உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது. தாக்குதல்களுக்கு பிறகு வரும் முதல் கிறிஸ்மஸ் இதுதான். கிறிஸ்து பிறப்பு இப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் விடிவைக் கொண்டுவரதா? எனக் காத்துக் கொண்டிருக்கிறோம். அரசுத் தரப்பிலிருந்து காவலர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஆலயத்தின் அருகாமையில் காவல் துறையினர் நிற்கிறார்கள். ஆனாலும் வழிபாட்டிற்குச் செல்வதற்குப் பயமாக உள்ளது. எந்த நேரத்தில், என்ன செய்வார்கள் என்ற அச்ச உணர்வு எல்லார் மனதிலும் இருந்துகொண்டுதான் உள்ளது”.

அன்பார்ந்தவர்களே! இதே போன்றதொரு சூழல்தான் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 123ன் பின்னணியாக உள்ளது. இப்பாடல் மலையேறு திருப்பாடல்களின் வரிசையில் நான்காவதாக இடம்பெறுகிறது. இப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பதைச் சரியாகக் கணிக்கமுடியவில்லை என்றும், எக்காலத்தில் எழுதப்பட்டது என்பதை கண்டறியமுடியவில்லை என்றும் விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இத்திருப்பாடலை இஸ்ரயேல் மக்களின் திருப்பயணப் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை உறுதிப்படுத்துகின்றனர். அப்படியானால் இஸ்ரயேல் மக்களின் திருப்பயணப் பின்னணி என்ன?
வெகுதொலைவிலிருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இஸ்ரயேல் மக்கள், எருசலேம் திருவிழாவிற்கு செல்லவேண்டுமெனில், புறவினத்தாருடைய ஊர்களையும், புறவினத்தார் வாழும் பகுதிகளையும் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. இஸ்ரயேல் குலத்தின் முன்னோர்கள் தங்கள் கை ஓங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு அருகிலிருந்த புறவினத்தாரை அப்புறத்தப்படுத்தாமல் விட்டுவிட்டனர். கானானியர், எமோரியர் போன்றோரை அங்கு ஆதிக்கம் செலுத்திய யோசேப்பின் குடும்பத்தினர் அப்புறப்படுத்தவில்லை என்பதை நீதித்தலைவர்கள் புத்தகம் முதல் பிரிவு 27-36 முடிய உள்ள சொற்றொடர்களில் வாசிக்கிறோம். கானானியர், எமோரியர் போன்ற புறவினத்தார் அவர்களது கடவுள்களை வணங்கினர். அவர்களைப் பொறுத்தவரை அவர்களது கடவுளே உண்மையான கடவுள். இஸ்ரயேல் மக்களின் யாவே இறைவன் உண்மைக் கடவுளல்ல. ஆனால் இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரை, யாவே இறைவன் மட்டுமே உண்மையான இறைவன். எனவே யாருடைய கடவுள் உண்மையான கடவுள் என வாதங்கள் நடைபெற்று வந்தன. எருசலேமைச் சுற்றி இதுபோன்ற சூழல் நிலவியது என்பதற்கு அரசர் முதல் புத்தகம் பிரிவு 18, 20 முதல் 40 முடிய உள்ள சொற்றொடர்களில் வரும் இறைவாக்கினர் எலியா மற்றும் போலி இறைவாக்கினர்கள் பற்றிப் பேசுகின்ற பகுதி ஓர் எடுத்துக்காட்டு. இது நாடு கடத்தப்படுவதற்கு முன்பிருந்த சூழல்.

பாபிலோனிலிருந்து நாடு திரும்பியபிறகு யூதா மிகச்சிறிய அரசாகக் குறுகியது. இஸ்ரயேலர்கள் சமாரியர்களோடும், கனானியர்களோடும் கலந்து வாழும் சூழல் நிலவியது. கலிலேயப் பகுதி முழுவதும் இஸ்ரயேலர்களோடு, புறவினத்தார்களும் வாழ்ந்து வந்தனர். எனவே எல்லா மக்களும் எருசலேம் திருவிழாவிற்குச் செல்பவர்களுமல்ல, யாவே இறைவனை வணங்குபவர்களுமல்ல.
இது மட்டுமல்லாமல், இப்புறவினத்தாரைத் தவிர இஸ்ரயேல் மக்களிடையேயும் சிலர் யாவே இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவர்கள் எருசலேம் திருவிழாவிற்கு செல்வதில் ஆர்வம் காட்டவும் இல்லை. இத்தகையோர் வாழ்ந்த பகுதிகளையும் கடந்து சென்றுதான் இஸ்ரயேல் மக்கள் எருசலேம் நகரை அடைய முடியும்.
ஆக, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்கு முன்பும், பின்பும் இஸ்ரயேல் மக்கள் புறவினத்தார் மற்றும் யாவே இறைவன் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் வாழும் பகுதிகளைக் கடந்து சென்றுதான் எருசலேம் அடைய முடியும் என்ற சூழல் இருந்தது. இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் இப்புறவினத்தாரைக் கடந்து செல்லும்போது பல்வேறு இகழ்ச்சிக்கும், ஏளனப் பேச்சுக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன். நிச்சயமாக, யாவே இறைவனைப் பற்றியும், எருசலேம் ஆலயத்தைப் பற்றியும் ஏன் இஸ்ரயேல் மக்களைப் பற்றியும் கூட பல்வேறு ஏச்சுப்பேச்சுகள் அவர்கள் காதுபடவே பேசியிருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், இன்று இந்தியாவில் சில மாநிலங்களில் அவ்வப்போது கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது போல, இஸ்ரயேல் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகிறேன். இவையனைத்தையும் இப்பாடலின் 3 மற்றும் 4வது சொற்றொடர்கள் நமக்கு உணர்த்துகின்றன.
எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.
இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும்.

இச்சூழலில் இஸ்ரயேல் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் அவர்களது செயல்கள் எவ்வாறு இருந்திருக்கும்? நிச்சயமாக அவர்களுக்கு கோபம் வந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எனவே இறைவனிடம் செபிக்கிறார்கள். இப்பாடலின் இரண்டாவது சொற்றொடர்
பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
நம்மைப் பொறுத்தவரை இவ்வுலகப் பயணமே ஒரு திருப்பயணம்தான். இத்திருப்பயணத்திலே பல்வேறு விதமான தடைகளையும், பிரச்சனைகளையும் நாம் சந்திக்கிறோம். அவற்றில் சிக்கிச் சிதைந்துவிடாமல் இறைவார்த்தையின்படி வாழ்ந்து, அவைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு இறை இரக்கமும், ஆசியும் வேண்டும்.
எருசலேமுக்குச் சென்ற எல்லா இஸ்ரயேல் மக்களுமே இந்த ஏளனப் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு, பொறுத்துக்கொண்டு சென்றிருக்க மாட்டார்கள். நிச்சயம் ஒரு சிலர் புறவினத்தாரோடு சேர்ந்துகொண்டு, யாவே இறைவனை மற்றும் அவர் மீது இஸ்ரயேல் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டிக் கொடுத்திருக்கக்கூடும். புறவினத்தாருடைய கேலிப்பேச்சுக்கும், இகழ்ச்சிக்கும் பயந்து, தங்களுடைய உண்மையான சுயத்தை மறைத்துப் போலியாக நடித்திருக்கக்கூடும். இதேபோல இன்றும் பிறருக்குப் பயந்து தங்களுடைய உண்மையான சுயத்தை வெளிப்படுத்தாமல் போலியாக நடிப்போர் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே வேளை எவ்வளவு ஏளனப் பேச்சுகள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தங்களுடைய குறிக்கோளில் நிலைத்திருந்து அவற்றை அடைபவரும் இருக்கிறார்கள். இதோ இத்திருப்பாடலில் பேசப்படும் சமூகம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இகழ்ச்சியும், ஏளனப்பேச்சும் அவர்களைக் காயப்படுத்தினாலும்கூட எருசலேம் சென்று இறைவனைக் காணவேண்டும், திருவிழாவில் பங்கேற்கவேண்டும் என்ற தங்களது குறிக்கோளிலிருந்து மாறவில்லை. மாறாக, யாவே இறைவனைத் தங்களுக்கு துணையாக அழைக்கிறார்கள், எங்களுக்கு இரங்கும் என்று இறைஞ்சுகிறார்கள்.

இன்றைய சமூக நிலையை சற்று ஆராய்ந்து பார்ப்போம். அலுவலகங்கள், குடும்பச்சூழல்கள், நட்பு வட்டாரங்கள் மற்றும் அறநெறி சம்பந்தப்பட்ட நமது தேர்வுகள் எப்படி இருக்கின்றன? அலுவலகங்களில் நேர்மையாக பணியாற்றுபவர்களும் பலவகையான ஏமாற்றுக்காரியங்களைச் செய்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில், நேர்மையாக பணியாற்றுவோரை தில்லுமுல்லு செய்வோர் கேலி செய்கிறார்கள். ஓர் அலுவலகத்தில் பெரும்பான்மையானோர் ஏமாற்றுக்காரர்கள் என்றால் அவர்கள் மத்தியில் நேர்மையாளர் காலம் தள்ளுவது மிகக் கடினம். ஆனால் இவர்களின் பொருட்டு நேர்மையை உதறித்தள்ளுவதும் ஒரு நேர்மையாளருக்கு அழகல்ல.
குடும்பச் சூழ்நிலைகளை எடுத்துக்கொண்டால் பல்வேறு நல்ல எடுத்துக்காட்டான குடும்பங்கள் வாழும் நமது சமூகங்களில் தவறான பழக்க வழக்கங்கள் உள்ள குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பிழைப்பிற்காக வெளியூர் அல்லது மாநகரங்களுக்குச் செல்லும்போது, நல்ல குடும்பத்திற்கான பழக்கவழக்கங்களை பிறரைப் பார்த்து மாற்றிக்கொண்டு அழிந்து வரும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பெரும்பான்மையானவர்கள் செய்யும்போது தவறு கூட சரியென்றாகிறது. இதனால் எல்லாரும் செய்கிறார்கள், எனவே நானும் செய்கிறேன். எல்லாரும் செய்கிறார்கள், நான் மட்டும் செய்யவில்லையெனில், என்னை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்ற மனநிலையும் நல்ல பழக்கவழக்கங்களை மாற்றுகிறது. புகைபிடிப்பது, மது அருந்துதல், அளவுக்கதிகமான ஒப்பனை பொருட்களை வாங்கிக் குவிப்பது மற்றும் ஆடம்பரச் செலவுகளைச் செய்து பிறர் முன்னிலையில் பகட்டாகக் காட்டிக் கொள்வது போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நம்மைச் சுற்றியுள்ள இதுபோன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு எதிராகப் போராடாமல் நமது சுயத்தை இழந்து விடுகிறோம்.

அன்பார்ந்தவர்களே! நமது நடை, உடை, பாவனைகளைக் கவனிப்போம். பிறர் செய்கிறார்கள், எனவே நாமும் செய்கிறோம் என்ற நிலையில் இருக்கின்றனவா? பிறர் நம்மை எள்ளி நகையாடுவார்கள் என்பதற்காக நமது நேர்மைத்தனத்தையும், உண்மையான கிறிஸ்தவ வாழ்வையும் விட்டு விலகுகிறோமா எனவும் சிந்திப்போம். அறநெறி சார்ந்த நமது தேர்வுகள் எப்படி இருக்கின்றன? பிறர் பார்க்கிறார்கள், இகழ்ந்து பேசுகிறார்கள் என்பதற்காக விவிலிய மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுகிறோமா? நட்பை இழந்து விடுவோம், அன்பை இழந்து விடுவோம், பதவியை இழந்து விடுவோம் என்பதற்காக எதையும் செய்யத் தயாராகிறோமா? பிறர் கேலிசெய்வார்கள் என்பதற்காக நம்மிடமிருக்கும் நல்ல பண்புகளை உதறித் தள்ளுகிறோமா?
இவ்வுலகத் திருப்பயணத்தில் தடைகளும், பிரச்சனைகளும் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை வென்றெடுக்க வேண்டும் என்பதை நம் ஆண்டவர் இயேசுவும், திருத்தூதர் பவுலும் அழகாகச் சொல்கிறார்கள். யோவான் நற்செய்தி 16:33
என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'.

திருத்தூதர் பணி 14:22
அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, 'நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.
இத்தகைய போராட்டத்திற்குத் தேவையான வலிமை இறைவனிடமிருந்து வரும் என்பதை இத்திருப்பாடல் நமக்குச் சொல்கின்றது.
எனவே, ஏளனப்பேச்சும் இகழ்ச்சியும் நம்மை சூழ்ந்திருக்கும்போது இறை உதவியை நாடுவோம். அவற்றை எதிர்கொள்ள சக்தி பெறுவோம். வெற்றி நடைபோடுவோம்.








All the contents on this site are copyrighted ©.