2012-05-28 15:59:34

வாரம் ஓர் அலசல் – “நீ என்னை எரித்தால் நான் உன்னை எரிப்பேன்”


மே28,2012. அந்த வயதான தம்பதியர் பார்க்கவே பரிதாபமாக இருந்தனர். அவர்கள் ஒரு மனநல மருத்துவரிடம் மனதுவிட்டுப் பகிர்ந்து கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. அந்த முதியவர் சொன்னார்.... “இளம் வயதிலேயே அரசுப்பணி கிடைத்தது. அப்பொழுதிலிருந்தே வீடு கட்டணும், கார் வாங்கணும், திருமணமானதும் குழந்தைகளுக்குச் சேமித்து வைக்கணும்... இப்படி நிறைய ஆசைகள் இருந்தன. திருமணமும் முடிந்தது. நானும் எனது துணைவியும் சிக்கனமாக வாழ்ந்து பணத்தைச் சேமித்தோம். குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்றாமல்.., எங்களுடைய கால்வலி, கழுத்துவலி, முதுகுவலி என உடல் தொந்தரவுகளுக்கும் சிகிச்சை எடுக்காமல்... இருந்தோம். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மருத்துவரிடம் போகலாம், எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கலாம் என்று எங்களுக்கு நாங்களே நியாயம் சொல்லிக் கொண்டோம். ஓய்வு பெற்ற போது சொந்த வீடு, கார், சொத்துக்கள் என எங்களது திட்டப்படியே எல்லாம் இருந்தன. ஆனால் மகிழ்ச்சி இல்லை. ஆரம்பக்கட்டத்திலே சிகிச்சை எடுக்காததால், இப்போது உடல் எலும்பெல்லாம் தேய்மானம் ஆகிவிட்டதாக மருத்துவர் சொன்னார். இப்பொழுது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். பிள்ளைகளுக்கு நாங்கள் சேர்த்துக் கொடுத்திருக்கிற சொத்துக்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட, அவர்களது பாலப்பருவத்தில் அவர்கள் கேட்ட இரண்டு சக்கர மிதிவண்டி, குடும்பச் சுற்றுலா போன்ற சின்னச் சின்ன ஆசைகளையும் தேவைகளையும் நாங்கள் நிறைவேற்றாமல் விட்டதால் அவர்களுக்கு எங்கள்மேல் ஏற்பட்ட கோபம்தான் அதிகமாக இருக்கிறது”.
இப்படிச் சொல்லிக் கண்கலங்கினார் அந்த முதியவர். அருகிலிருந்த அவரது மனைவியும் அவர் சொன்னதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருந்தார். அன்பு நேயர்களே, வாழ்க்கைக்குப் பொருளும் பணமும் சொத்தும் தேவைதான். ஆயினும், அவற்றைச் சேமிப்பதில், கடிவாளம் கட்டிக்கொண்டு ஓடி ஓடி உழைப்பதில் பலர் வாழ்க்கையின் உயிர்நாடியையே தொலைத்து விடுகிறார்கள். நல்ல உடல் நலமும், மன நலமும் இவைதரும் மகிழ்ச்சியும் நிம்மதியும்தான் வாழ்க்கைக்குத் தேவை. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு வேலைசெய்யும் இந்த அவரச உலகில் உடல் ஓய்வுக்குக் கொடுக்கப்படும் நேரம் மிகக் குறைவு. அதனால் மனஉளைச்சல், இரத்தஅழுத்தம், அதிகப்பதட்டம், சர்க்கரைநோய், தேவையற்றகொழுப்பு போன்றவற்றால் பலர் எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இன்று உலகில் இடம்பெறும் இறப்புக்களில், 63 விழுக்காட்டுக்கு அதிகமான இறப்புகளுக்கு, இதயம் தொடர்புடைய நோய்கள், புற்றுநோய்கள், சுவாசம் தொடர்புடைய நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் காரணம் என்றும், இவ்விறப்புக்களில் சுமார் 80 விழுக்காடு, வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இடம்பெறுகிறது என்றும், இதனால் இந்நாடுகளுக்கு 2025ம் ஆண்டுக்குள் 7 டிரில்லியன் டாலர்வரை இழப்பு ஏற்படும் என்றும், உலகில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் இரத்தஅழுத்தத்தாலும், பத்துப் பேருக்கு ஒருவர் வீதம் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நோய்கள் தொடர்புடைய இறப்புக்களை அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 25 விழுக்காடாகக் குறைப்பதற்கு சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இச்சனிக்கிழமை நடந்து முடிந்த ஆறு நாள்கள் கொண்ட 65வது உலக நலவாழ்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நோய்களுக்குக் காரணமாகும் புகையிலைப் பயன்பாடு, குடிப்பழக்கம், ஆரோக்யமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கும் இம்மாநாட்டில் நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன. WHO நிறுவனத்தின் 194 உறுப்பு நாடுகளின் நலவாழ்வு அமைச்சர்கள், நலவாழ்வு தொடர்புடைய அதிகாரிகள், இன்னும் பிற பிரதிநிதிகள் என சுமார் மூவாயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர். WHO நிறுவனத்தில் நலவாழ்வை ஊக்குவிக்கும் பிரிவின் தலைவர் மருத்துவர் Douglas Bettcher இம்மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்குகிறார்....
RealAudioMP3 மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படையானது நல்ல உடல்நலம். ஆயினும் இக்காலத்தில் பெருகி வரும் உயிர்க்கொல்லி நோய்களால் மனித வாழ்வு பேராபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இன்றையச் சீரழிவுக் கலாச்சாரமும், அறநெறி வாழ்க்கையின் சிதைவும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். இக்காலத்தில், விடலைப் பருவத்திலேயே சிகரெட் பிடிப்போரைக் காண முடிகின்றது. 'சும்மா ஒரு கிக்... ஒரு த்ரில்’ என்று இவர்கள் நண்பர் வட்டத்தில் முதலில் ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில், 'மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலைடா...’ என அடிமையாகிற அளவுக்கு அப்பழக்கம், பற்றிப்படர்ந்துவிடுகிறது. இந்தச் சிகரெட் புகையில், புற்றுநோயை உண்டாக்கும் 43 வேதியப் பொருள்கள் மற்றும்பிற நானூறு நச்சுப்பொருள்கள் உட்பட நான்காயிரத்துக்கு மேற்பட்ட வேதியப் பொருள்கள் உள்ளன என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும். Nicotine, tar, carbon monoxide, formaldehyde, ammonia, hydrogen cyanide, arsenic, DDT போன்ற வேதியப் பொருள்கள் இந்தப் புகையில் உள்ளன. இந்தப் புகையில் சுவாசிக்கப்படும் Nicotine நேரடியாக நுரையீரலுக்குள் சென்று ஆறு வினாடிகளில் மூளையை அடைகின்றது. இந்தப் புகை, ''சுவாசக்குழாயில் சளியை உண்டுபண்ணி அடிக்கடி இருமலை வரச்செய்யும். மேலும், குடல்புண், வாய்ப்புண், தொண்டை எரிச்சல், நாக்கு சுவைஉணர்வை இழத்தல், கண்பார்வை மங்குதல், தோல்சுருக்கம், கை கால் நடுக்கம், புற்றுநோய், நுரையீரல் சுவாசக்குழாய் சுருக்கம் வரை இது கொண்டுபோகும்.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, புகையிலைப் பயன்பாட்டோடு தொடர்புடைய நோய்களால் உலகில் ஆண்டுதோறும் சுமார் அறுபது இலட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் 6 இலட்சம் பேர் சிகரெட் புகைப்போரின் புகையைச் சுவாசிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் 2030ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 80 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் இறப்பார்கள். இவர்களில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இறப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. இந்தப் புள்ளி விபரங்கள் பற்றி வாசிக்கும் போதெல்லாம், ''என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்'' என்று சிகரெட், மனிதரை நோக்கி அச்சுறுத்துவது போல் இருக்கிறது. அன்பு நேயர்களே, மே 31, வருகிற வியாழன் புகையிலை எதிர்ப்பு நாள். புகைப்பிடிப்போர் இந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறும், சிகரெட் விளம்பரம் குறித்த விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் அந்த விதிமுறைகளைக் கவனித்து நடக்குமாறும் இவ்வாண்டில் இந்நாளில் அழைப்பு விடுக்கப்படுகின்றனர். பாடுபட்டுச் சேர்க்கும் பணத்தைச் செலவழித்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டுமா?. உடல்நலத்தையும் அமைதியையும் நிம்மதியையும் குலைக்க வேண்டுமா?. புகைப்பதுகூட ஒரு தற்கொலைதானே. சிகரெட்டைப் புகைக்கும் போது என்றால் அது மனதுக்கு மருந்தாக இருக்கலாம். ஆனால் அது சிலநாள்களுக்குத்தான் நீடிக்கும். இந்தப் பழக்கத்துக்கு அடிமையான மனிதர் தனக்குரிய சவப்பெட்டியைத் தானே தயார் செய்து கொள்கின்றனர்.
புகைப்பிடித்தலை நிறுத்தினால்....
20 நிமிடங்களுக்குள் இதயத்துடிப்பும் இரத்தஅழுத்தமும் சரியாகும். 12 மணிநேரத்தில் இரத்தத்திலுள்ள கார்பன்மோனாக்ஸைடின் அளவு இயல்பான நிலைக்கு வரும். 2 முதல் 12 வாரங்களில் இரத்த ஓட்டம் சீராகி நுரையீரல் வேலை செய்யும் விதத்திலும் முன்னேற்றம் காணப்படும். ஒன்று முதல் 9 மாதங்களில் இருமலும் மூச்சுவிடுவதிலிருக்கும் கஷ்டமும் குறையும். இதய நோய் ஆபத்து ஓராண்டில் பாதியாகும். இவ்வாறு பல நன்மைகள் விளையும்.
அன்பு நேயர்களே, நான் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகி விட்டேனே, எப்படி அதிலிருந்து வெளிவருவது என்று சிந்திக்கின்றீர்களா..... இதோ சில பரிந்துரைகள்...
புகைப்பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்த முதலில் ஒரு தேதியினை முடிவு செய்யுங்கள். தீக்குச்சிப் பெட்டிகளையும் லைட்டரையும் மறைத்து வையுங்கள். உங்கள் வீட்டை புகைப்பிடித்தல் இல்லாத பகுதியாக ஆக்குங்கள். புகைப்பிடிப்போரை உங்கள் அருகில் இருந்து புகைக்க வேண்டாமெனக் கனிவுடன் கூறுங்கள். மதுபானம் அருந்துவதைத் தவிர்த்து விடுங்கள். பிற வேலைகளில் ஈடுபடுங்கள். மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்தும் யோகா, தியானம், நடனம், உடலுழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றைத் தினமும் தவறாமல் செய்யுங்கள். புகையிலையால் உங்கள் பொருளாதாரத்துக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இவை, அந்தப் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர உங்களுக்குக் கைகொடுக்கும். இந்தப் பழக்கத்தை நிறுத்தத் தொடங்கிய சில நாள்களுக்கு, கோபமும் எரிச்சலும் ஏற்படலாம், அந்நேரங்களில் தண்ணீர் குடியுங்கள். ஓரிடத்தில் அமர்ந்து மூச்சினை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். அத்துடன் காரட் மற்றும் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுங்கள். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருந்தால்கூட இக்காய்களிலுள்ள சத்துக்கள் அதனைத் தடுத்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அன்பர்களே, நல்ல உடல்நலம் இருந்தாலே மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியில் வாழ உதவ முடியும். எனவே நமது வாழ்க்கையில் நிம்மதியும் நம்பிக்கையும் இருந்தால், இளமைக்கு சிகரெட் என்ற ஊதுகோலும் முதுமைக்கு ஊன்று கோலும் தேவையில்லை. எச்சரிக்கை - “நீ என்னை எரித்தால் நான் உன்னை எரிப்பேன்”








All the contents on this site are copyrighted ©.