2012-05-28 15:55:59

ஒன்றிப்பு என்பது இறைவனின் கொடையாகவே இருக்க முடியும் என்கிறார் திருத்தந்தை


மே,28,2012. புதிய நாவையும் புதிய இதயத்தையும், தகவல் தொடர்புக்கான ஆற்றலையும் கொடுக்கும் இறைவனின் கொடையாகவே ஒன்றிப்பு என்பது நிலைத்திருக்க முடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பெந்தகோஸ்தே திருவிழாவையொட்டி உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் ஞாயிறு காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை, பெந்தகோஸ்தே என்பது மனித குல ஒன்றிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் பகிர்வின் விழா என்றார்.
தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியினால் நாம் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக வந்துள்ளபோதிலும், மக்களிடையேயான புரிந்து கொள்ளுதலும் பகிர்தலும் ஆழம் குறைந்ததாகவும், சிரமமானதாகவும் மாறியுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் பாப்பிறை.
இன்றைய உலகில் மக்கள் தங்கள் சுயநலனுக்காகவே உழைத்து தங்கள் உலகத்திலேயே முடங்கி விடுவதைக் காணமுடிகிறது என்ற பாப்பிறை, பழைய ஏற்பாட்டு நூலில் காணப்படும் பாபேல் நிகழ்வையும் சுட்டிக்காட்டி, கடவுளுக்கு எதிராகச் செல்ல விரும்பி செயல்பட்ட மக்கள், அடிப்படை மனிதக்கூறுகளை இழந்து, தங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு எதிராகச் சென்றதை பின்னர் உணர்ந்தனர் என்றார்.
இன்றைய நவீன தொழில்நுட்பங்களின், குறிப்பாக, தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சி, மக்களிடையே விளங்க வேண்டிய புரிந்துகொள்ளும் தன்மையை அதிகரித்துள்ளதா என்ற கேள்வியையும் முன்வைத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
பாபேல் நகர் நிகழ்வின்போது புரிந்துகோள்ளமுடியாத மொழியில் பேசி குழப்பம் விளைந்ததையும், பெந்தகோஸ்தே நாளில் மக்கள் தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்துகொண்டதையும் எடுத்துக்கூறி இரு நிகழ்வுகளுக்கும் இடையே இருந்த வேற்றுமைகளை விளக்கிக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.