2012-05-26 15:54:29

திருத்தந்தை - கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது


மே26,2012. கடுந்தாக்குதல்களுக்கு மத்தியில் கடவுளின் வீடு உறுதியாக நிற்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது” என்ற (மத்.7-24,25)இயேசுவின் திருச்சொற்களைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசுவின் இந்த வாக்குறுதி திருஅவைக்கு எப்போதும் இருந்து வருகிறது என்று கூறினார்.
இத்தாலிய அருங்கொடை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலை சுமார் ஐம்பதாயிரம் விசுவாசிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பற்றதன்மை மிகுந்துள்ள இந்த நவீன சமுதாயத்தில் நாம் நிச்சயமற்ற நிலைகளை எதிர்நோக்குகிறோம், நாம் வாழ்வதற்கான அர்த்தமுள்ள கூறுகளும் குறைவுபடுகின்றன, எனவே, கடவுள் என்ற உறுதியான பாறைமீது, நமது வாழ்வையும் சமூக உறவுகளையும் கட்டி எழுப்ப வேண்டியது முக்கியமாக இருக்கின்றது, நம்மை வழிநடத்துவதற்கு கடவுளின் கரத்தை அனுமதிக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
பிறரன்புச் செயல்கள் மற்றும் விசுவாசத்திற்குச் சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் வாழ்வை மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தையின் இவ்வுரைக்கு முன்னர், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ இந்த அருங்கொடை இயக்க விசுவாசிகளுக்கு திருப்பலியும் நிகழ்த்தினார்.








All the contents on this site are copyrighted ©.