2012-05-26 15:32:43

கவிதைக் கனவுகள் - இறைவனிடம் ஒரு விவாதம்


கவிஞர் மு.மேத்தா எழுதிய இறைவனிடம் ஒரு விவாதம் என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்...

ஏழைதான் நான்
இருந்தாலும் இறைவா உன்
செல்வ மாளிகையில்
சிறுபூவாய் மலரேனோ?

குளிக்கத் தெரியாத
குழந்தையொன்று தன் தாயைக்
குளிப்பாட்டி அழகு செய்யக்
குதித்துவரின் குற்றமுண்டோ?

தூயவனே, என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே, உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்

எல்லையில்லா உன் புகழை
எடுத்துரைக்க வந்த சிறு
பிள்ளைதான் நான்.... எனது
பிஞ்சுமொழி கேளாயோ?

குவலயமே நன்கொடையாய்க்
கொடுத்தவன் நீ... என்னுடைய
கவலையெல்லாம் தீர இன்று
கவிதை தர மாட்டாயோ...?

உன்னிடத்தைத் தேடி
ஓடிவர இயலேன் நான்
என்னிடத்தைத் தேடி உன்
இறையருளும் வாராதோ?

என்னுடைய தகுதியினை
எண்ணி நான் பாடவில்லை....
உன்னுடைய தகுதியினை
உணர்ந்ததால் பாடுகிறேன்!









All the contents on this site are copyrighted ©.