2012-05-26 15:56:02

அருள்தந்தை லொம்பார்தி : பாபேலிருந்து பெந்தகோஸ்தே


மே26,2012. நமது வாழ்க்கையின் இருளான நேரங்களிலும், நல்லது எது, தீயது எது என்று அறிந்துணருவதற்கு, தேர்ந்துதெளிதல், ஆறுதல், வல்லமை ஆகிய கொடைகளுக்காகத் தூய ஆவியிடம் வேண்டுவோம் என்று வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சமுதாயத்திலும் திருஅவையிலும் எப்பொழுதும் இருந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாபேல் குழப்பங்கள் நீங்கி பெந்தகோஸ்தெயின் உரையாடல் மற்றும் ஒன்றிப்பு நோக்கி நாம் தொடர்ந்து செல்ல, தூய ஆவியின் இக்கொடைகள் நமக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
“ஒக்தாவா தியஸ்” என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் பாபேலிருந்து பெந்தகோஸ்தே என்ற தலைப்பில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த திங்களன்று உரோம் கர்தினால்களுடன் திருத்தந்தை உணவருந்திய போது அவர் ஆற்றிய உரையின் முக்கிய கருத்துக்களைக் குறிப்பிட்ட அருள்தந்தை லொம்பார்தி, நன்மைக்கும் தீமைக்கும் இடையே மனிதர் தங்களுக்குள் நடத்தும் போராட்டத்தில், ஒன்று கடவுளை மறக்கச் செய்கிறது, மற்றது மனிதர் தன்னையே மறக்கச் செய்கின்றது என்ற திருத்தந்தையின் விளக்கத்தையும் குறிப்பிட்டார்.
தீயவனின் கொடிக்கடியில் அல்லது இயேசுவின் கொடிக்கடியில் நிற்பதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று புனித லொயோலா இஞ்ஞாசியாரது ஆன்மீகப் பயிற்சிகளில் சொல்லப்பட்டிருப்பதையும் குறிப்பிட்ட இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி, இயேசுவின் நண்பர்களாகவும் ஊழியர்களாகவும் இருப்பதற்கு நன்மைத்தனம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.