செக் குடியரசுப் பிரதமர் Petr Necas, திருத்தந்தை சந்திப்பு
மே25,2012. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas அவர்கள், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை சுமார் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார்
என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. திருத்தந்தையைச் சந்தித்த பின்னர்
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான
உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் செக் பிரதமர்
Necas. இச்சந்திப்பின்போது, புனித நார்பெர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பிராக் நகரின்
மிகப் பழமையான Strahov துறவுமடத்தைச் சேர்ந்த 9ம் நூற்றாண்டு திருவிவிலியத்தைத் திருத்தந்தைக்குப்
பரிசாகக் கொடுத்தார் செக் பிரதமர். திருத்தந்தையும், செக் பிரதமருக்கு, வத்திக்கான்
புனித பேதுரு வளாகத்திலுள்ள பெர்னினி தூண் வடிவம் போன்ற விலைமதிப்பற்ற பேனாவை அளித்தார்.