2012-05-25 15:34:38

சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி உண்ணாநோன்பு போராட்டம்


மே,25,2012. இலங்கையில் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களை விடுவிக்கக் கோரி இவ்வியாழனன்று 500க்கும் அதிகமான மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2009ம் ஆண்டு மேமாதம் முடிவுற்ற உள்நாட்டுப் போருக்குப் பின் மூன்றாண்டுகள் கழிந்தபின்னரும் தமிழர்களை எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது அநீதி என்று இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெருமாள் பூமிநாதன் கூறினார்.
பல சிறைகளில் தமிழர்கள் தாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரி, சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பூமிநாதன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளில் பலரது நிலை மோசமடைந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
இலங்கைச் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மே மாதத் துவக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.