2012-05-23 15:46:51

மக்களுக்குத் தேவையான நலமளிக்கும் பணிகளை உருவாக்குவது உலகச் சமுதாயத்தின் கடமை - வத்திகான் உயர் அதிகாரி


மே,23,2012. நலவாழ்வுப் பணிகள் பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது இன்னும் அதிகமாகத் திணிக்காமல், அவர்களுக்குத் தேவையான நலமளிக்கும் பணிகளை உருவாக்குவது உலகச் சமுதாயத்தின் கடமை என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இத்திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் 65வது உலக நலவாழ்வு மாநாட்டில் திருப்பீடத்தின் சார்பில் ஐ.நா.வின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் Zygmunt Zimowski உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நலப்பணிகள் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை திருத்தந்தை பல்வேறு நேரங்களில் கூறிவந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Zimowski, இந்த உரிமையில் அடிப்படை நலப் பணிகளாவது இணைக்கப்பட அனைத்து நாடுகளும் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகள் தங்கள் மொத்த வருவாயில் ஒரு பகுதியை பின்தங்கிய நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒதுக்கி வைத்தால், அடிப்படை நலப் பணிகள் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புக்கள் பெருகும் என்று திருத்தந்தை ‘Caritas in veritate’ என்ற சுற்று மடலில் கூறியுள்ளதையும் பேராயர் தன் உரையில் எடுத்துரைத்தார்.
உலகின் பல நாடுகளிலும் 1,20,000க்கும் அதிகமான நலப்பணி மையங்களின் வழியாக பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள் பற்றி குறிப்பிட்ட பேராயர் Zimowski, இப்பணிகளால் பெருமளவு பயன்பெறுவது வறியோரே என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.