2012-05-23 15:47:26

சீனத் திருஅவைக்காக செபிக்கும் நாளைக் கொண்டாட சீன அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்


மே,23,2012. மேமாதம் 24ம் தேதி சீனாவின் Shanghai நகரில் அமைந்துள்ள Sheshan மரியன்னைத் திருத்தலத்திற்கு அந்நகர மக்களைத் தவிர மற்ற கத்தோலிக்கர்கள் செல்லக் கூடாது என்று சீன அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேமாதம் 24ம் தேதி, இவ்வியாழனன்று சீனத் தலத் திருஅவைக்காக செபிக்கும் நாளென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளார். இந்த நாளையொட்டி, Sheshan மரியன்னைத் திருத்தலத்திற்குச் சென்று திருப்பலி நிகழ்த்தி செபிப்பது சீனத் தலத் திருஅவையில் வழக்கமாக உள்ளது. இந்த முயற்சியைத் தடை செய்யும் நோக்கத்துடன் சீன அரசு செயல்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Shanghai நகருக்கு 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரியன்னையின் திருத்தலம் சீன மக்களின் பாதுகாவலான அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இத்திருத்தலத்தின் அருகே இயேசு சபையினரால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை சீன அரசு தனதாக்கிக் கொண்டது.
2007ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சீனத் தலத் திருஅவைக்காக செபிக்கும் நாளை உருவாக்கி, அகில உலகத் திருஅவையை சீன நாட்டுக்காக செபிக்கும்படி அழைத்தார். 2008ம் ஆண்டு முதல் சீன அரசு இந்த நாளையொட்டி அதிகக் கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.