2012-05-23 15:48:40

Rio+20 உலக உச்சி மாநாட்டில் உணவு பாதுகாப்பைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் - உலகின் முன்னணி ஆய்வாளர்கள்


மே,23,2012. ஜூன் மாதம் 20ம் தேதி முதல் 22ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் Rio de Janeiro நகரில் நடைபெறும் Rio+20 உலக உச்சி மாநாட்டில் உலகின் உணவு பாதுகாப்பைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று உலகின் முன்னணி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பொது நிதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஒரு பெரும் உலக நிறுவனமான CGIAR என்ற உணவு உற்பத்தி ஆய்வு நிறுவனம் Rioவில் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய ஏழு அம்சங்களை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
நில வளம், நீர் வளம், காடுகள், நீர் ஊற்றுகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வழிகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து தேடுவது மிகவும் அவசியம் என்பது இந்த ஏழு அம்சங்களில் ஒன்று.
100க்கும் மேலான நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கும் இந்த மாநாட்டில், உலகின் 40 விழுக்காடு மக்களின் வாழ்வியல் ஆதாரமாகவும், பணியாகவும் இருக்கும் வேளாண்மை பற்றி மிகத் தீவிரமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவ்வறிக்கை கூறியுள்ளது.
1992ம் ஆண்டு Rio நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றம் குறித்த உலக மாநாட்டிற்குப் பின், பத்தாண்டுகள் கழித்து, 2002ம் ஆண்டு, இந்த மாநாடு தென் ஆப்ரிக்காவின் Johannesburg நகரில் நடைபெற்றது. தற்போது இந்த மாநாடு Rio+20 என்ற தலைப்பில் மீண்டும் Rio de Janeiro நகரில் நடைபெற உள்ளது.








All the contents on this site are copyrighted ©.