2012-05-21 15:06:14

அமெரிக்கக் கத்தோலிக்கர்களின் மத உரிமைகளைக் காப்பதற்கு, 'உரிமைகளுக்காக இரு வாரங்கள்' செப முயற்சிகள்


மே,21,2012. அமெரிக்கக் கத்தோலிக்கர்களின் மத உரிமைகளைக் காப்பதற்கு, அமெரிக்க ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அழைப்பை ஏற்று அந்நாட்டு கத்தோலிக்கர்கள் ஜூன் 21ம் தேதி முதல், ஜூலை 4ம் தேதி வரை 'உரிமைகளுக்காக இரு வாரங்கள்' என்ற முயற்சியைத் திட்டமிட்டு வருகின்றனர் என்று அமெரிக்கக் கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
நலக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் ஒபாமா அரசு கருத்தடை மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது கத்தோலிக்க மதத்திற்கும், கத்தோலிக்கர்களின் மனசாட்சிக்கும் எதிரானவை என்ற எதிர்ப்பை அமெரிக்கக் கத்தோலிக்கத் திருஅவை கடந்த சில மாதங்களாகத் தெரிவித்து வருகிறது.
இந்த எதிர்ப்பின் ஓர் அங்கமாக, ஜூன் மாதம் 21ம் தேதி மாலை ஆரம்பமாகும் செப முயற்சிகள் ஜூலை மாதம் 4ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் விடுதலை நாளன்று நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 21ம் தேதி Baltimoreல் உள்ள அன்னை மரியாவின் விண்ணேற்பு பசிலிக்காவில் பேராயர் William Lori அவர்கள் நடத்தும் திருவிழிப்புத் திருப்பலியுடன் இந்த இருவார முயற்சிகள் ஆரம்பமாகும். ஜூலை மாதம் 4ம் தேதி Washingtonல் உள்ள அன்னை மரியாவின் அமல உற்பவ பசிலிக்காவில் கர்தினால் Donald Wuerl நிகழ்த்தும் திருப்பலியுடன் நிறைவடையும்.
இவ்விரு வாரங்களில் Philadelphia, Portland, Arlington, Denver ஆகிய பல மறைமாவட்டங்களிலும் பல்வேறு செப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.