2012-05-19 15:20:31

வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் - மனச்சான்று மற்றும் மத சுதந்திரம்


மே19,2012. மனச்சான்று அல்லது மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடாமல், ஒரு சமுதாயத்தின் பொதுநலனைத் தேடுவதில், கத்தோலிக்கத் திருஅவையும் அதன் உறுப்பினர்களும் முயற்சித்து வருகிறார்கள் என்று வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, மனச்சான்று மற்றும் மத சுதந்திரம் குறித்து அண்மையில் கானடா ஆயர்கள் வெளியிட்ட முக்கியமான மேய்ப்புப்பணி அறிக்கை குறித்து விளக்கினார்.
மதம் மற்றும் பொது வாழ்வு குறித்து The Pew Forum என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நாடுகளில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக தனியாள் அல்லது சில மதக்குழுக்களின் வழிபாட்டு உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகில் இன்று இடம் பெறும் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சமய அடக்குமுறைகளால் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உண்மை மற்றும் வாழ்வின் பொருள் குறித்து அறிந்திருப்பதாகக் கூறும் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், கவலை தருவதாகவும் உள்ளது எனவும் அருள்தந்தை லொம்பார்தி விளக்கினார்.







All the contents on this site are copyrighted ©.