2012-05-18 15:49:02

மடகாஸ்கர் அரசியல் தலைவர்களுக்கு கிறிஸ்தவ சபைகள் வேண்டுகோள்


மே 18,2012. மடகாஸ்கர் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல் தலைவர்கள் தடையாய் இருப்பதை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
நாட்டின் சர்ச்சைக்குரிய விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில், தற்போதைய இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் மற்றும் நிர்வாகத்துக்கு வெளியே இருக்கும் அரசியல்வாதிகள் நேரத்தை வீணடிக்கின்றனர் என்றுரைக்கும் அத்தலைவர்களின் அறிக்கை, தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
தங்களது சொந்த ஆதாயங்களுக்காக இடைக்கால அரசை நீடிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, மடகாஸ்கர் மக்களின் நலனில் இவர்கள் அக்கறை காட்டவில்லை என்றும் கூறுகிறது.
தற்போது பெரும்பாலான மக்கள் வறுமையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் கடினமான சூழலிலும் வாழ்வதாகவும், பெற்றோரையும் முதியோரையும் மதிக்கும் பாரம்பரியப் பண்புகள் அழிந்து வருகின்றன எனவும் மடகாஸ்கர் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.