வத்திக்கானில் திரையிடப்பட்ட 'நாசரேத்தூர் மரியா' என்ற
திரைப்படத்தைப் பற்றி திருத்தந்தை
மே,17,2012. மனித வாழ்வின் பல முக்கிய செல்வங்களின் பிறப்பிடமாய் ஒரு தாய் இருப்பதால்,
அவரை எளிதில் விவரிப்பது கடினம், அதிலும் சிறப்பாக அன்னை மரியாவைக் குறித்து பேசுவது
என்றால் அதைவிட கடினம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இப்புதனன்று மாலை
வத்திக்கானில் திரையிடப்பட்ட 'நாசரேத்தூர் மரியா' (Maria di Nazareth) என்ற திரைப்படத்தின்
இறுதியில் உரையாற்றிய திருத்தந்தை, இத்திரைப்படத்தை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் தன்
பாராட்டுக்களையும், நன்றியையும் கூறினார். 'நாசரேத்தூர் மரியா' மூன்று பெண்களைச் சுற்றி
உருவாக்கப்பட்டத் திரைப்படம் என்பதைக் கூறிய திருத்தந்தை, இம்மூவரில், ஏரோது அரசனுடன்
வாழ்ந்த எரோதியா தன் சுயநலத்தால் கட்டுண்டு, நன்மையையும், உண்மையையும் பார்க்கத் தவறியவர்
என்றும், மகதலா மரியாவோ துவக்கத்தில் தவறானப் பாதையைத் தேர்ந்திருந்தாலும் இயேசுவைச்
சந்தித்தபின் முற்றிலும் மாறினார் என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார். இத்திரைப்படத்தின்
மைய உருவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அன்னை மரியா 'ஆகட்டும்' என்ற அருள்நிறைந்த வார்த்தையின்
எடுத்துக்காட்டாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என்றும் திருத்தந்தை கூறினார். 'இதோ
நான் வருகிறேன்' என்று கூறிய நாசரேத்தூர் மரியாவைப் போல் நாம் நமது வாழ்வை அர்ப்பணிக்க
அவரே நமக்குப் பரிந்துரை செய்வாராக என்று திருத்தந்தை கூறினார்.