2012-05-17 15:31:16

ஜெர்மன் திருஅவையால் நடத்தப்படும் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி


மே,17,2012. தங்கள் பழைய வழிகளைத் துறந்து, புதிய வழிகளில் செல்ல விழைவோரே புதிய திருப்பங்களுக்குத் துணிபவர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மேமாதம் 16 இப்புதன் துவங்கி இச்சனிக்கிழமை வரை ஜெர்மனியின் Mannheim எனும் நகரில் "துணிவுள்ள புதியத் திருப்பம்" என்ற மையக்கருத்துடன் ஜெர்மன் திருஅவையால் நடத்தப்படும் மாநாட்டிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
புதியத் திருப்பங்களை உருவாக்கும் எந்த ஒரு மனிதரும் இறைவனை நோக்கித் திரும்பும்போதுதான் அத்திருப்பங்கள் முழுமையான பொருள் பெறுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, இத்திருப்பம் வெறும் தனிப்பட்டவரின் முயற்சி என்பதைவிட, கத்தோலிக்கக் குடும்பம் அனைத்தும் இணைந்து உருவாக்கும் திருப்பமாக இருக்க வேண்டும் என்று தன் செய்தியில் வலியுறுத்தினார்.
தன் செய்தியின் இறுதிப் பகுதியில் இளையோருக்குச் சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார் திருத்தந்தை. கடந்த ஆண்டு மத்ரித் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளில் இவ்விளையோரைத் தான் சந்தித்ததை நினைவு கூர்ந்தத் திருத்தந்தை, இளையோர் எடுக்க வேண்டிய பல முடிவுகளில் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிறப்பு அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
Mannheimல் நடைபெறும் இந்த 98வது கத்தோலிக்க மாநாடு, வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவாக, விரைவில் துவங்கவுள்ள விசுவாச ஆண்டு கொண்டாட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது என்று தன் செய்தியின் இறுதியில் திருத்தந்தை கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.