2012-05-15 15:30:35

விவிலியத் தேடல் – திருப்பாடல் 121


மே 15,2012. RealAudioMP3 திவினோ அமோரே இறையன்பு அன்னைமரியிடம் சென்று செபித்தால் இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கையும் மனதுக்கு அமைதியும் ஏற்படுகின்றது. அன்பு நேயர்களே, உரோம் மாநகருக்குத் தெற்கே சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தத் திவினோ அமோரே திருத்தலத்தின் பெயரைச் சொன்னவுடனே, உரோம் மாநகரில் பலர் ஒருவாய்ப்பட சொல்வது இப்படித்தான். 1740ம் ஆண்டு வசந்த காலத்தில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட ஒரு பயணி, இந்த திருத்தலம் அமைந்துள்ள பகுதியில் ஓநாய்களால் சூழப்பட்ட போது அன்னைமரியால் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டார். அன்றுமுதல் இந்நாள்வரை இத்திருத்தலம் நாடிப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும், உரோம் நகரிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவனியாக இத்திருத்தலத்திற்கு செல்கின்றனர். அக்டோபர் வரை நடைபெறும் இத்திருப்பயணங்களின் போது அன்னைமரியின் படம் ஒரு வாகனத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இரவு 11 மணிக்குமேல் தொடங்கும் சுமார் 6 மணிநேர இந்த நடைப்பயணம் முழுவதும் செபமும் பாடல்களும் மட்டுமே இடம் பெறுகின்றன. எல்லாரும் இறைவனைப் பற்றிய, அன்னைமரியா பற்றிய சிந்தனையிலே செல்கிறார்கள். இது எனது அனுபவமும்கூட.
பொதுவாக, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சரி, பண்டைக்காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை, மக்களது பக்தி வாழ்க்கையைப் பார்த்தோமென்றால், அது ஒரு திருப்பயணமாகவே அமைந்துள்ளது. எல்லா மதங்களிலுமே அந்தந்த மதங்களோடு தொடர்புடைய முக்கிய இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் திருப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நீண்ட பயணங்களில் பாடப்படும் பாடல்கள், சொல்லப்படும் கதைகள், கவிதைகள் எல்லாமே இந்தத் திருப்பயணத்திற்குத் தேவைப்படும் நம்பிக்கை, துணிச்சல், விழிப்புணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன. இஸ்ரயேல் மக்களும் தங்களது திருச்சட்டத்தின்படி, ஓர் ஆண்டில் மூன்று முறைகள் எருசலேம் ஆலயத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டனர். இன்று நாம் திருப்பயணங்களில் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வது போல், அன்றும் அம்மக்கள் இறைவனைத் துதித்துப் போற்றிக் கொண்டு சென்றார்கள். அவ்வாறு அவர்கள் பாடிய 15 திருப்பாடல்கள் சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பாடல் 120 முதல் 134 வரையுள்ள இந்தத் திருப்பயணப் பாடல்களில் முதல் பாடலாகிய 120 பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். எருசலேம் ஆலயத்துக்கு ஏறிச்செல்ல வேண்டிய 15 படிகளோடு இந்தப் பாடல்கள் தொடர்பு கொண்டவையாக இருக்கலாம் எனவும், யூதர்களின் மரபுப்படி, ஒவ்வொரு படியிலும் ஏறும்போது ஒவ்வொரு பாடலைப் பாடியதாகவும் கூறுகின்றனர். இஸ்ரயேல் திருப்பயணிகள் இரண்டாவதுபடியில் ஏறியபோது பாடிய 121ம் திருப்பாடல் பற்றி இன்று பார்ப்போம். திருப்பயணத்தில் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு மற்றவர் பதில் சொல்வது போல அமைந்துள்ளது திருப்பாடல் 121. இஸ்ரயேலருக்கு இருந்த ஒரே ஓர் ஆலயம் எருசலேம் ஆலயம் மட்டுமே. சமாரியப் பெண்கூட இயேசுவிடம், “நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்று கூறுகிறீர்களே?” என்று கேட்டார் என யோவான் நற்செய்தி பிரிவு 4,20ல் வாசிக்கிறோம். எருசலேம் ஆலயம் சீயோன் மலைமீது அமைந்துள்ளது. எனவேதான் இந்தத் திருப்பாடலில் முதலில் ஒருவர்......
“மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்”?....
என்று கேள்வியைத் தொடங்குகிறார். இறைவனை நோக்கி எனது கண்களை உயர்த்தினேன், எனக்கு உதவி எங்கிருந்து கிடைக்கும் என்று ஒருவர் கேட்கிறார். அதற்குச் சொல்லப்படும் பதில், நம் ஒவ்வொருவரிடமும் சொல்வது போல் இருக்கின்றது. insert
நமது வாழ்க்கைப் பயணம் இன்பமும் துன்பமும் கலந்தது. அதில் சுமைகளும் உண்டு, சுகங்களும் உண்டு. பகைமையும் உண்டு, பாசமும் உண்டு. ஏமாற்றுக்களும் உண்டு, நம்பிக்கைகளும் உண்டு. நயவஞ்சகமாக கண்ணிவலையில் சிக்க வைப்பவர்களும் உண்டு, புறமுதுகில் குத்துபவர்களும் உண்டு. ஆபத்தில் அணைப்பவரும் உண்டு. நமது வாழ்க்கை எவ்வளவு வேதனைகள், துன்பங்கள் நிறைந்திருந்தாலும், யார் கைவிட்டாலும், நம்மை ஒருபோதும் கைவிடாதவர் இறைவன் என்று திருப்பாடல் 121 சொல்கிறது. ஷோமர் என்ற எபிரேயச் சொல் காக்கிறார் என்ற பொருளுடன், 8 வசனங்கள் கொண்ட இந்தத் திருப்பாடலில் 6 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். ஆம். இறைவன் நல்ல ஆயனாக, தாயாக இருந்து நம்மைப் பாதுகாக்கிறார் என்பதற்கு விவிலியத்தில் எடுத்துக்காட்டுகள் உள்ளன. நானே நல்ல ஆயன். என் ஆடுகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன் என்று இயேசுவும் சொன்னார்.
எசாயா 43, 1-4 ல் ஆண்டவர் சொல்கிறார் -
“அஞ்சாதே, நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்: ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா: தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்: நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே. அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்........”
எசாயா 49, 1-16ல்
“ஆண்டவர் தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்........ ”
புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய 2வது மடல், 4ம் பரிவிலும், “ஆண்டவர் தீங்கு அனைத்திலிருந்தும் காத்தார்” என்று சொல்கிறார்.
திருப்பாடல் 91ல்,
“அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது”.
திருப்பாடல் 18, 6ல்
“என் நெருக்கடிவேளையில் நான் என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது”.
இவ்வாறு இறைவன், நாம் வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் காத்து வருகிறார் என்பதற்கு விவிலியத்திலிருந்து பல எடுத்துக்காட்டுக்களைக் குறிப்பிடலாம். இன்றைக்கு ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இக்காலத்திய ஈராக்கின் தென்கிழக்குப் பகுதியின் Nasariyah வுக்கு அருகிலுள்ள பகுதியாக, அக்காலத்திய கல்தேயர்களின் Ur இருந்தது. அதை விட்டுவிட்டு தற்போதைய சிரியாவின் எல்லைப்புறத்திலுள்ள துருக்கி நாட்டு ஆரான் (Haran) என்ற பகுதியில் குடியேறினார் ஆபிரகாம். ஏனெனில் ஆண்டவர் அவரிடம்,
″உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்”
என்று சொன்னார். ஆண்டவர் ஆபிரகாமிடம் ஆணையிட்ட போது, அந்தப் புதிய இடத்தைப் பற்றி ஆபிரகாமுக்கு எதுவுமே தெரியாது. எங்கே போகிறோம், ஏன் போகிறோம் என்பதும் தெரியாது. ஆயினும் ஆபிரகாம் ஆரானை விட்டுச் சென்றது மனித வரலாற்றையே மாற்றியது. ஆண்டவர் சொன்னதால் ஆபிரகாம் செய்தார். இதற்கு அடிப்படைக் காரணம் ஆபிரகாம் ஆண்டவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத பற்றுறுதி. எந்த நிலையிலும் ஆண்டவர் காப்பார் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆபிரகாமின் இச்செயல் பற்றி எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில், 12,8-9
“தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே…...”
என்று பாராட்டப்பட்டுள்ளது. எனவே அன்புக்கினியவர்களே, வாழ்க்கையில் யாராலும் எதனாலும் அவிழ்க்க முடியாத எந்தச் சிக்கலான சூழல்களிலும் இறைவனின் பாதுகாப்பில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள். இதைத்தான் திருப்பாடல் 121 நமக்கு உணர்த்துகின்றது. குடும்பத்தில் ஒருவர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது, புதிய பணிகளுக்கு, கடினமான இடங்களுக்குச் செல்லும் போது பல கிறிஸ்தவக் குடும்பங்களில் இந்த 121ம் திருப்பாடலைப் பாடிச் செபித்து வழியனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எனவே நாமும், நமது சோதனை வேதனை நேரங்களில் இப்பாடலை மீண்டும் மீண்டும் தனியாகவும் குடும்பமாகவும் செபிப்போம். அடிக்கடி மனதிற்குள்ளே சொல்லிக் கொள்வோம்
ஒரு சமயம், ஒரு சீடர் தனது குருவிடம், புனித அந்தோணியாரின் புதுமை செபம் என்று, ஒரு செப அட்டையை நீட்டினார். இந்தச் செபத்தில் அப்படி என்ன புதுமை இருக்கின்றது என்று கேட்டார் அந்தக் குரு. இந்தச் செபத்திலுள்ள ஒவ்வொரு சொல்லையும் தவறவிடாது வரிவரியாக ஒரு நாளில் ஒன்பது தடவைகள் சொன்னால் கேட்ட வரம் நிச்சயமாக கிடைக்கும் என்றார் சீடர். அப்போது குரு அந்தச் செப அட்டையை தூர வைத்துவிட்டுச் சொன்னார் : “உனது இதயத்திலிருந்து செபி. நீ எது கேட்டாலும் நிச்சயம் கிடைக்கும்” என்று. “இதயமின்றி வார்த்தைகளால் செபிப்பதைவிட இதயத்தோடு வார்த்தைகளின்றி செபிப்பது மேல்” என்றார் காந்திஜி.
இதயத்திலிருந்து ஆண்டவரிடம் செபிப்போம்.
“ஆண்டவர் பகலிலும் இரவிலும் காக்கிறார், எல்லாத் தீமையினின்றும் பாதுகாக்கிறார்; போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் என்னைக் காக்கிறார்.....”








All the contents on this site are copyrighted ©.