2012-05-15 15:31:52

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட முதல் மறைமாவட்டம் 500வது ஆண்டு நிறைவு


மே,15,2012. இலத்தீன் அமெரிக்காவில் வளர்ந்து வரும் விசுவாச வாழ்வில் மரியன்னைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்று Santo Domingo பேராயர் கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez கூறினார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முதல் மறைமாவட்டமாக "Santa Maria la Antigua" என்ற பெயருடன் அமைக்கப்பட்ட மறைமாவட்டத்தின் 500வது ஆண்டு நிறைவின் துவக்க விழா திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Lopez Rodriguez இவ்வாறு கூறினார்.
இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளிலும் பிரச்சனைகள் சூழ்ந்திருந்தாலும், இந்நாடுகளின் மக்கள் தங்கள் கலாச்சாரத்தில் ஊறிய விசுவாசத்தை வெளிப்படுத்தத் தவறுவதில்லை என்று கர்தினால் Lopez Rodriguez பெருமையுடன் சுட்டிக் காட்டினார்.
20000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இத்துவக்கவிழாவில் உரையாற்றிய Panama பேராயர் José Domingo Ulloa Mendieta, மக்களுக்குப் பணிபுரியும் அரசுத் தலைவர்கள் நன்னெறி விழுமியங்களைக் கடைபிடிப்பதில் தவறாமல் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1513ம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் லியோ அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் 500வது ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு முழுவதும் தொடரும் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.