2012-05-14 14:01:33

வாரம் ஓர் அலசல் - ஆனந்த நிலையங்கள் உருவாகட்டும்


மே14,2012. RealAudioMP3 உலக அளவிலான இளம் தொழிலதிபர் விருதுக்கென உலக வங்கி அண்மையில் தேர்ந்தெடுத்த மூன்று இளைஞர்களில் ஒருவர் சரத்பாபு. முப்பது வயதான இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டனில் உலக அளவிலான இளம் தொழிலதிபர் விருதைப் பெற்றுத் திரும்பியிருக்கிறார். சென்னை, மடிப்பாக்கத்தில், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பிறந்தவர் இந்தச் சாதனை இளைஞர் சரத்பாபு, தனது சிறு வயதில் இவருடைய தாய் தீபா ரமணி, இட்லி சுடும்போது, அவற்றை வீடு வீடாகச் சென்று விற்று வந்திருக்கிறார். வறுமையில் வளர்ந்த இவருக்கு இன்று, இந்தியாவின் ஏழு மாநிலங்களில் உணவு விடுதிகள் உள்ளன. தேசிய அளவில், தொழிலதிபர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன. தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு அடுத்தபடியாக, "நாட்டின் அடையாளம்' என்ற விருது இவருக்குக் கிடைத்திருக்கிறது. தனது இந்தச் சாதனைகளுக்குத் தூண்டுதலாக இருந்தவர், துணை நின்றவர் யார் என்பது பற்றி சரத்பாபு சொல்லியிருப்பதை தமிழ் ஊடகங்கள் நெகிழ்ந்து செய்திகளை வெளியிட்டுள்ளன. சரத்பாபு சொல்லியிருக்கிறார்....
“அத்தனை விருதுகளும், என் அம்மாவின் கால் விரல்களுக்கேச் சமர்ப்பணம். ஆண் துணை இல்லாமல், 40 ஆண்டுகளுக்குமுன், எங்கள் அம்மா எங்களை வளர்த்து ஆளாக்கியது, மிகப்பெரும் கதை. காலை 4 மணியிலிருந்து 10 மணி வரை இட்லி சுட்டு விற்பார். 10 மணியிலிருந்து மதியம் வரை, சத்துணவு ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்தார். மாலையில், முதியோர் கல்வி நிலையத்துக்குச் சென்று கல்வி கற்பிப்பார். சனி, ஞாயிறுகளில் பிற வேலைகள் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி, எங்களைப் படிக்க வைத்தார். இயந்திரம் போல உழைத்து எங்களைக் கரை சேர்த்தார். நாங்கள் எல்லாரும் தூங்கப் போன பிறகு, யாருக்கும் தெரியாமல் அம்மா, தனியாகச் சென்று நான்கு டம்ளர் தண்ணீர் குடிப்பார். அம்மாவுக்கு தண்ணீர் ரொம்பப் பிடிக்கும் என அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். எல்லாருக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு, பசி தாங்க முடியாமல் தண்ணீர் குடிக்கிறார் என்ற உண்மை, நான் பெரியவனாக வளர்ந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது. எங்களுக்காக, அம்மா பட்டினியோடு கிடந்த நாள்கள் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே, “பட்டினி இல்லாத இந்தியா” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். தினமும் கடுமையாக உழைத்து எங்கள் தினசரி சாப்பாடு போக, எஞ்சிய சில்லறைகளை சேகரித்து, என்னைப் படிக்க வைத்தார். கல்வி மட்டுமே எங்களை உயர்த்தும் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். வீட்டில் அளவுக்கதிகமான பிரச்சனை வந்தபோதும், எங்களது படிப்பை இடைநிறுத்தாமல் காப்பாற்றினார். அம்மா இல்லையென்றால் கல்வி கிடைத்திருக்காது. கல்வி இல்லை என்றால் பொருளாதார விடுதலை கிடைத்திருக்காது. எங்கேயாவது குழந்தைத் தொழிலாளியாகத்தான் போயிருப்பேன். இன்று எனக்கு கிடைத்த அங்கீகாரம் அனைத்திற்கும் எனது அம்மாவே காரணம்”.
தாய்க்கு இணையானவர் என்று இவ்வுலகத்தில் யாரும் இல்லை. தாயின் அன்புக்கு நிகரானது என்றும் இவ்வுலகத்தில் எதுவுமே கிடையாது. தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகிற்குக் கீழே, வட்ட வடிவமான இருள் இருப்பதைப் போல, எல்லா அன்னையரும், தனக்கான இருட்டை மறைத்துவிட்டு பிள்ளைகளுக்கு ஒளி தருகின்றனர். இத்தகைய, தனக்கென வாழாத மனநிலை உள்ள அன்னையரே குடும்பங்களின் மையப் புள்ளிகளாக இருக்கிறார்கள். இவர்களாலே குடும்பங்கள் தழைத்தோங்குகின்றன. அம்மா என்றால் அன்பு தான் முதலில் நம் நினைவுக்கு வரும். இச்சனிக்கிழமையன்று இணையத்தில் ஒரு காணொளிப்படம் வெளியாகியிருந்தது. அதில் பிறந்து சில மாதங்களே ஆன தனது மகனை அணைத்தவாறு ஒரு தாய் தனது மகன் பற்றி விவரித்திருக்கிறார்.
“21 வது வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. 23 வது வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன் என்று அறிந்ததும் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன். எனது வயிற்றில் வளரும் கரு ஆண் குழந்தை என்பதை 18 வது வாரத்தில் அறிந்தேன். நானும் எனது கணவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிறிஸ்டியான் என்று பெயரும் வைத்தோம். ஆனால் அச்செய்தி தெரிந்த ஒரு வாரத்துக்குள் மற்றோர் அதிர்ச்சி செய்தியையும் மருத்துவர் சொன்னார். பிள்ளை எப்படி, எந்த நிலையில் பிறக்கக்கூடும் என்று சொன்னார் மருத்துவர். காலம் நிறைவுற்ற போது கிறிஸ்டியான் சுகமாகப் பிறந்தான். ஆனால் கண்கள் இரண்டும் இல்லாதது போல் மூடிய நிலையில்! வாய் திறந்த நிலையில்! நெஞ்சைப் பிசைந்து கொண்டோம். ஆயினும் மகனை மகிழ்ச்சியோடு வீட்டுக்குக் கொண்டு சென்றோம். வெளியில் எனது மகனைக் கொண்டு செல்லும் போதெல்லாம் எல்லாருமே வித்தியாசமாகப் பார்த்தார்கள். புறமுதுகில் பேசினார்கள். நீ இந்தக் கருவைக் கலைத்திருக்கக் கூடாதா? என்று காதுபடக் கூறினார்கள். Face book ல் எனது மகன் பற்றி வெளியிட்டேன். இப்போது எனது மகன்மீது நான் வைத்திருக்கும் அன்பைப் பார்த்து பலரும் வியக்கிறார்கள். தாங்களும் பாடம் கற்றுக் கொண்டதாகப் பலர் எழுதி வருகிறார்கள்”
பிறவியிலேயே கண்களை இழந்து, விகாரமான தோற்றத்துடன் பிறந்திருக்கும் பிள்ளை, தாய்க்குப் பாரமில்லை. தாய் மனது தங்கம் என்பது எத்துணை உண்மை. ஒரு சமயம் நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருவர், எல்லாப் பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறிய பின்னர் மீதமிருந்த ஒரு கவளச் சோற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம். இப்படி அந்த வீட்டில் அடிக்கடி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பக்கட்டுப்பாடு ஆதரவாளர் ஒருவர் அத்தாயிடம், “பார்த்தீர்களா? நிறையப் பிள்ளைகள் இருப்பதால்தானே உங்களுக்கு ஒருவாய்ச் சோறு மிஞ்சுகிறது. இரண்டோடு நிறுத்தி இருந்தால் உங்கள் பங்குக் குறைந்திருக்காதே” என்று அறிவுரை சொன்னாராம். அதற்கு அந்தத் தாய், “இன்னொரு பிள்ளை இருந்திருந்தால் அதற்கு இந்த ஒருவாய்ச் சோற்றையும் போட்டிருப்பேன். நாம் சாப்பிடுவதில் என்ன மகிழ்ச்சி, பிள்ளைகள் சாப்பிடுவதில்தானே ஆனந்தமே இருக்கிறது” என்றாராம். இரைக்கு அலையும் மலைப்பாம்புகூட கருவுற்று முட்டையை அடைகாக்கும் காலத்தில் உண்ணாமல் இருந்து எடை இழந்து வாடுமாம். மூர்க்கமான முதலையும் கரையோரங்களில் முட்டையிட்டு மணலைப் பறித்து மூடி அதன்மேல் பட்டினியோடு படுத்துக் கிடந்து பரம்பரையை வளர்க்குமாம். அன்பர்களே, தனக்கென வாழாத அன்னையரின் மேன்மையை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் நம் ஒவ்வொருவர் அன்னையுமே இதற்குச் சான்றாக இருக்கிறார்கள்.
மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்னை தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட அன்னை தினம் குறித்து நமது இந்த வார ஞாயிறு சிந்தனையில் கேட்டீர்கள். மே 15, இச்செவ்வாய் அனைத்துலக குடும்ப தினம். நல்லதொரு குடும்பத்தை அமைப்பதில் தாய் முதன்மை வகிக்கிறார். ஒரு குடும்பம் உயர்வதும் தாழ்வதும் அன்னையர் கையில்தான் இருக்கின்றது. தந்தையர் கைவிட்ட எத்தனையோ குடும்பங்கள் தாய்மாரின் தியாக வாழ்வால் சீரும் சிறப்பும் அடைகின்றன. உலக அளவிலான இளம் தொழிலதிபர் விருதைப் பெற்றுள்ள சரத்பாபுவின் தாய் இதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறார். கூட்டுக்குடும்ப அமைப்புகள் குறைந்து, திருமண முறிவுகளும் முதியோர் இல்லங்களும் அதிகரித்து வரும் கலாச்சாரம் இப்போது வளர்ந்து வருகின்றது. அண்மைக் காலங்களில் விவாகரத்து வழக்குகளும் அதிகமாகி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது நமது வருங்காலத் தலைமுறைகளாகிய நாளையத் தலைவர்கள். சீனாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட இரண்டு கோடியே முப்பது இலட்சம் சிறார்கள், தங்களது தாய் தந்தையரின் நேரடி பாரமரிப்பில்லாமல் வளர்கிறார்கள் என்று 2011ம் ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புள்ளிவிபர அறிக்கை கூறுகின்றது.
ஒரு சமுதாயத்தைச் சமைப்பதில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணரும் திருத்தந்தையும் திருஅவையின் பிற தலைவர்களும் பிளவுபடாதத் திருமண வாழ்வுக்கும் உறுதியான குடும்பங்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இஞ்ஞாயிறன்றுகூட இத்தாலியின் Arezzo வில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “நலிந்தவர்களைப் பாதுகாக்கும் நீதியான சட்டங்கள் மூலம் குடும்பங்கள் பாதுகாக்கப்படுமாறு” கேட்டுக் கொண்டார். இத்திருப்பலியில் இத்தாலியப் பிரதமர் மாரியோ மோந்தியும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓயாமல் சண்டை போடும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் எதிரிகள். குடும்பம் என்பது, யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வதும் யாரை வேண்டுமானாலும் நீக்கிக் கொள்வதும் நிகழும் அலுவலகம் அல்ல. வீடு என்பது, வருவோர் போவோரிடம் புன்னைகையை வீசி அவரவர் வசதிப்படி எழுந்து உடுத்தி வெளியே போய் உள்ளே வரும் பயணியர் விடுதியோ, உணவகமோ, சிற்றுண்டி நிலையமோ அல்ல. அதுபோல, குடும்பம் என்பது, யாரும் எப்பொழுதும் உள்ளே ஏறுவதும், வெளியே இறங்குவதும் நடக்கும் ஒரு பேருந்தோ, இரயிலோ அல்ல. அப்படிக் குடும்ப வாழ்வில் நிகழ்ந்தால் அது உயிரற்ற இயக்கமாக இருக்கும். அது குடும்ப வாழ்வாக இருக்காது. குடும்பம் என்றால் கூடிவாழும் இடம். அது கூட்டு முன்னேற்றத்துக்கானத் தளம். அங்கே இன்பமும் துன்பமும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும். எனது பசி, உனது வேதனை என்ற நிலை இருந்தால்தான் அது குடும்பமாக இருக்கும். “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்கிற உணர்வுதான் உண்மையான குடும்பத்துக்கு அடிநாதமாக அமையும். அத்தகைய குடும்பங்களே ஆனந்த நிலையங்களாக இருக்கும்.
குடும்பங்கள் கோவிலாக வேண்டுமானால் தம்பதியரே அடிக்கடி கலந்து பேசுங்கள். பிறர் குற்றங்களைப் பெரிதுபடுத்துவதைவிட தன் குற்றம் என்னவெனக் கேளுங்கள். சேர்ந்து சாப்பிடுங்கள். சேர்ந்து செபியுங்கள். வாழ்வை உயர்த்தும் செயல்களில் சேர்ந்து ஈடுபடுங்கள். அவரவர் கவலை அவரவருக்கு என்று தீவுகளாக இயங்காமல் ஒருவரின் துயர் அனைவரின் துயர் என்று பங்கேற்க முயற்சியுங்கள். பிறரிடம் குற்றம் கண்டால் அன்பாக, நெருக்கமாக, கடும்சொற்கள் இன்றி, குற்றம்சாட்டும் தொனியில் இன்றி, அக்கறை மிகுந்த குரலில் சொல்லப் பழகுங்கள். பிறரை வஞ்சகத்தால் சுரண்டாதீர்கள். ஒருவருக்கொருவர் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது குடும்பங்கள் ஆனந்த நிலையங்களாகும். குடும்பங்கள், சிறப்பாக, நமது வத்திக்கான் வானொலி நேயர்களின் குடும்பங்கள் இத்தகைய ஆனந்த நிலையங்களாகட்டும். இதுவே அனைத்துலக குடும்ப தினம் விடுக்கும் அழைப்பாகும். எமது நேயர் குடும்பங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்







All the contents on this site are copyrighted ©.