2012-05-14 15:04:00

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தைப் பாதிக்கின்றன


மே,14,2012. இந்தியாவிலிருந்து வரும் தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தைப் பாதிப்பதாக பினாங்கு பயனீட்டாளர் கழக கல்வி அதிகாரி சுப்பாராவ் குற்றம்சாட்டுகிறார்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் வரும் தமிழ் நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டும் பினாங்கு பயனீட்டாளர் கழகம், இத்தொடர்கள் ஒளிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மலேசிய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
நெடுந்தொடர்களில் வரும் காட்சிகளும் கதையும் பலவிதமான கலாச்சார சீரழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது என்று தமிழ் மக்களிடையே தாங்கள் நடத்தும் கலந்துரையாடல்களில் தங்களுக்குத் தெரியவந்ததாக பினாங்கு பயனீட்டாளர் கழகத்தின் கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளை மக்கள் தாமாக விரும்பி கட்டணம் செலுத்திப் பார்க்கிறார்கள் என்பதால், அத்தொடர்களுக்கு நேரடியாக அரசு தடை விதிக்க முடியாது என்று மலேசிய அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நெடுந்தொடர்களை பார்த்துவரும் இளைஞர்களின் பழக்க வழக்கங்கள் மோசமடைவதாகவும், பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளுதல், வன்முறை பாதையில் செல்லுதல் போன்றவற்றுக்கு அவர்கள் ஆட்படுவதாகவும் சுப்பாராவ் கூறினார்.
தொடர்களில் மூழ்கிப்போகும் பெண்கள் சமையல், பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற வீட்டுக் கடமைகளில் தவறுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தம்முடைய கோரிக்கையை மலேசிய அரசாங்கம் தொடர்ந்து நிராகரிக்குமானால் பெரிய எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பினாங்கு பயனீட்டாளர் கழகம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.