2012-05-14 14:59:34

Pro Life அமைப்பின் தாக்கம் உரோம் நகரிலும் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்வைத் தருகிறது - வத்திக்கான் உயர் அதிகாரி


மே,14,2012. மனித வாழ்வுக்கு மதிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் அமெரிக்காவில் உருவாகியுள்ள Pro Life அமைப்பின் தாக்கம் இத்தாலியின் தலைநகரான உரோம் நகரிலும் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மனித வாழ்வை மதிக்கும் ஒரு முயற்சியாக அமெரிக்காவில் நடைபெறும் Pro Life பேரணிகளைப் போல், உரோம் நகரில் இஞ்ஞாயிறன்று 7000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட முதல் பேரணியில் பல குருக்களுடன் கலந்து கொண்ட திருஅவையின் உச்ச நீதிமன்றத் தலைவரான கர்தினால் Raymond Burke இவ்வாறு கூறினார்.
உரோம் நகரில் உள்ள 150க்கும் அதிகமான குழுக்கள் இணைந்து நடத்திய இந்தப் பேரணி, உரோம் நகரின் Colosseum என்ற பழம்பெரும் நினைவுச் சின்னத்திலிருந்து துவங்கி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தை வந்தடைந்தது.
கிறிஸ்துவத்தின் தலைமை இடமாகவும், திருத்தந்தையின் நகரமாகவும் உள்ள உரோமில் இதுபோன்ற ஒரு பேரணியைத் தான் இதுவரைக் கண்டதில்லை என்று இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்த Juan Miguel Montes கூறினார்.
இப்பேரணியில் இளையோரின் ஈடுபாடு தனக்குப் பெரிதும் ஆறுதலாக உள்ளது என்று கூறிய Montes, உயிர்கள் மீது இளையோர் பொதுவாகவே அதிக மதிப்பு கொண்டுள்ளனர் என்று கூறினார்.
இப்பேரணியில் இத்தாலிய இளையோர் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகளின் இளையோரும் கலந்து கொண்டனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.