2012-05-12 16:04:20

புத்தர் சிலையை அகற்றுவதற்கு ஐ.நாவிடம் முறையிடத் தீர்மானம்


மே 12,2012. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர் வழிபாட்டுத்தலங்களையொட்டிய பகுதிகளிலும், தனியார் நிலங்களிலும் அத்துமீறிப் புத்த ஆலயங்கள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. நிறுவனத்திடம் புகார் கொடுக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ்ச் சான்றோரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகின்றது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இந்த அப்பட்டமான மத உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு மட்டங்களிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு நீதியான பதில் கிட்டாத காரணத்தினால் இவ்வாறு ஐ.நாவிடம் நீதி கேட்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
பிரிட்டனிலுள்ள பிரபலமான வழக்கறிஞர்கள் மூலம் ஐ.நாவிடம் இந்த முறையீட்டைச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்துமாமன்ற வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது, வடக்கு, கிழக்கில் ஆலய நிலங்களைப் படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் ஆகியன உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக இந்து மாமன்ற வட்டாரங்கள் மேலும் கூறின.







All the contents on this site are copyrighted ©.