2012-05-11 15:05:50

சிரியாவில் பயங்கரவாதம் நிறுத்தப்படுவதற்கு மெல்கித்தே ரீதித் தலைவர் வேண்டுகோள்


மே 11,2012. சிரியா நாட்டு தமாஸ்கசில் இவ்வியாழனன்று இரண்டு வாகனக் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளவேளை, அந்நாட்டில் வன்முறை முடிவுக்கு கொண்டு வரப்படுமாறு வலியுறுத்தினார் முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios Laham.
இந்தக் குண்டு வெடிப்புகள் இடம் பெற்ற போது, அந்த இடத்திற்குச் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அனனியாஸ் ஆலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்ததாகக் கூறிய, அந்தியோக்கியாவின் மெல்கித்தே கிரேக்கரீதி திருச்சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios, ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தாங்கள் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியில் உலக சமுதாயத்தின் தலையீடு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சிரியா மக்களின் வேதனைக் குரல்களை உலக சமுதாயம் கேட்காமல் இருக்கின்றது என்றும் கூறினார்.
புனிதபூமி, 63 ஆண்டுகளாக அமைதிக்காகக் காத்திருக்கின்றது, ஆயினும், அப்பகுதி மீது பாராமுகமும், வெற்று வார்த்தைகளும் மௌனமுமே இதுவரை உலகிடமிருந்து கிடைத்துள்ளன என்றும், அந்தியோக்கியாவின் மெல்கித்தே கிரேக்கரீதி முதுபெரும் தலைவர் கவலை தெரிவித்தார்.
மத்திய கிழக்கை வெறுப்பும் போரும் விழுங்குவதற்கு உலகம் அனுமதிக்கக் கூடாது என்றும், போதும் என்று சொல்வதற்கான நேரம் வந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் சுமார் 55 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வாகனத் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதல்களை ஐ.நா.பாதுகாப்பு அவையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.