2012-05-10 15:33:57

உரையாடல் பாணியில் இரு மணி நேரம் நீடித்த ஓர் இணையதள நிகழ்வில் கர்தினால் Dolan


மே,10,2012. கத்தோலிக்கத் திருஅவை 'தாய் திருஅவை' என்று எப்போதும் அழைக்கப்படுகிறது, எனவே, நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தோர் மீது இத்தாய் எப்போதும் பரிவு கொண்டிருப்பார் என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
மக்களுடன் கேள்வி பதில் உரையாடல் என்ற பாணியில் இரு மணி நேரம் நீடித்த ஓர் இணையதள நிகழ்வில் இச்செவ்வாயன்று பங்கேற்ற கர்தினால் Dolan, திருஅவையின் பணிகள் பற்றியும், அமெரிக்க அரசுடன் திருஅவை கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் பேசினார்.
தஞ்சம் தேடி அமெரிக்க மண்ணை நாடி வரும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்குப் பதில், அவர்களைப் பல்வேறு சட்ட திட்டங்களால் வேற்றுமைப்படுத்தி, உதவிகளை மறுக்கும் போக்கு அரசிடம் காணப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்திய கர்தினால் Dolan, மனிதாபிமானம், கிறிஸ்தவப் பண்பு ஆகியவற்றை திருஅவை என்றும் உயர்த்திப் பிடிக்கும் என்று கூறினார்.
கருத்தடை, கருக்கலைப்பு ஆகிய செயல்பாடுகளுக்கு அரசு காட்டிவரும் ஆதரவை திருஅவை வன்மையாக எதிர்க்கும் என்றும், மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மதச் சுதந்திரத்தை பாதிக்கும் இந்த நடைமுறைக்குத் திருஅவையின் ஆதரவு என்றும் கிடையாது என்றும் கர்தினால் தன் உரையாடலில் தெளிவுபடுத்தினார்.
உலகில் தாக்கங்களை உருவாக்கும் முதல் 100 பேர் என்ற பட்டியலில் கர்தினால் Dolanன் பெயரை Time இதழ் வெளியிட்டிருப்பதைக் குறித்து அவரிடம் கேள்வி எழுந்தபோது, இத்தகையப் புகழ் நிலையற்றது என்றும், உண்மையின் பக்கம் நிற்பதே நிலையானப் புகழைத்தரும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.