2012-05-10 15:33:19

அருள்பணியாளர்களாகப் பயிற்சி பெறும் அனைவரும் மக்கள் பணியைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


மே,10,2012. அருள்பணியாளர்களாகப் பயிற்சி பெறும் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மக்கள் பணியைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரில் உள்ள ஸ்பானிய பாப்பிறைக் கல்லூரி தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, அக்கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய 150 பேர் கொண்ட குழுவைத் திருப்பீடத்தில் இவ்வியாழனன்று மதியம் சந்தித்தபோது திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஸ்பானிய மறைமாவட்டக் குருக்களின் பாதுகாவலராகிய புனித அவிலா நகர் ஜான் அவர்களின் திருநாளன்று இக்கல்லூரியின் உறுப்பினர்களைச் சந்திப்பது தனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, புனித அவிலா ஜான் திருஅவையின் மறைவல்லுனராக விரைவில் உயர்த்தப்பட உள்ளார் என்றும் கூறினார்.
கட்டுபாடான வாழ்வைப் பின்பற்றுவதிலும், அன்னை மரியா மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பதிலும் இளம் குருக்கள் புனித அவிலா நகர் ஜானைப் பின்பற்ற வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
‘மறைமாவட்டங்களுக்கென உழைக்கும் அருள்பணியாளர்கள்’ என்ற குழுவை ஸ்பெயின் நாட்டில் உருவாக்கிய அருளாளர் Manuel Domingo y Sol, உரோம் நகரில் திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் ஆசீரோடு இக்கல்லூரியைத் துவக்கினார் என்பதைத் தன் உரையில் நினைவு கூர்ந்தத் திருத்தந்தை, இக்கல்லூரியை நிறுவிய அருளாளரின் உயர்ந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்துவது இக்கல்லூரியுடன் தொடர்புடைய அனைவரின் கடமை என்பதை எடுத்துரைத்தார்.
இக்கல்லூரியின் உறுப்பினர்களோடு திருத்தந்தையைச் சந்தித்த மத்ரித் பேராயர் கர்தினால் Maria Rouco Varela, மற்றும் கூடியிருந்த பேராயர்கள், மற்றும் கல்லூரியின் அனைத்து உறுப்பினர்களையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.