2012-05-09 15:40:51

நகர்ப்புற வாழ்க்கை ஒவ்வாமையை அதிகரிக்கிறது


மே,09,2012. இயற்கைச் சூழலை அனுபவிக்காத நகர்ப்புற வாழ்க்கை காரணமாக பலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக பின்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.
மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் நகர்ப்புறம் சாராத பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில் அதிகம் காணப்படுவதாகவும், அத்தகைய சூழலில் வாழும் மனிதர்களுக்கு ஒவ்வாமை குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேவேளையில், பசுமை சூழலற்ற நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பயன் கிடைப்பதில்லை என்பதால் அத்தகையவர்கள் மத்தியில் ஒவ்வாமை அதிகரித்து காணப்படுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஒவ்வாமை என்பது பல வகைப்படும். சிலருக்கு சில வகை உணவுகள் ஒவ்வாமையை தூண்டும். சிலருக்கு சிலவகை மருந்துகள் ஒவ்வாமையை தூண்டும். சிலருக்கு சிலவகை திரவங்களால் ஒவ்வாமை ஏற்படும். ஆனால் மனிதர்களில் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது என்கிற அடிப்படை கேள்விக்கு மட்டும் நீண்ட நாட்களாகவே மருத்துவரீதியான உறுதியான விடை கிடைக்கவில்லை.
அத்தகைய ஆய்வு ஒன்றில் ஈடுபட்ட பின்லாந்து அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவுகளை அறிவியலுக்கான தேசிய இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் முடிவில், இவர்கள் நகர்வாழ் மக்களுக்கு இரண்டு பரிந்துரைகளை செய்திருக்கிறார்கள். நகர்வாழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் முடிந்தவரை பசுமைத்தாவரங்களை வளர்க்க வேண்டும் என்பதுடன், முடியும்போதெல்லாம் பசுமையான இயற்கை சூழலில் நேரத்தை செலவிடவேண்டும் என்பது இவர்களின் முதல் பரிந்துரை.

இரண்டாவதாக, நகரங்களைத் திட்டமிடும்போது பூங்காக்கள் மற்றும் பசுமை வெளிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது அவர்களின் இரண்டாவது பரிந்துரை.








All the contents on this site are copyrighted ©.