2012-05-09 15:35:58

கர்தினால் டர்க்சன் - மனித வர்த்தகத்தை ஒழிக்க தனிப்பட்ட மனிதர்களின் மனமாற்றமே உறுதியான வழி


மே,09,2012. மனித வர்த்தகத்தைக் களைவதற்கு திருஅவை எடுக்கும் முயற்சியாக திருப்பீடத்தின் நீதி அமைதி அவை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் வாழ்த்துவதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறினார்.
சட்டங்களுக்குப் புறம்பாக உலகில் இன்று நடைபெறும் மனித வர்த்தகத்தைக் களைவதற்கு வத்திக்கானில் இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், மனித வர்த்தகத்தை ஒழிக்க ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் இருந்தாலும், தனிப்பட்ட மனிதர்களின் மனமாற்றமே இந்தக் குற்றத்தைத் தடுக்கும் உறுதியான வழி என்று கூறினார்.
மனித வர்த்தகத்திற்கு உட்படுத்தப்படும் மக்கள் முந்தைய காலத்தின் அடிமைகளைப் போல், அல்லது அவர்களைவிடவும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், உலகில் நிலவும் வறுமையை ஆதாயமாக்கிக் கொண்டு மனசாட்சியற்றவர்கள் நடத்தும் இந்த வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால், வறுமையைப் போக்கும் வழிகளை அரசுகள் ஆராய வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
மனித சமுதாயம் சந்தித்து வரும் இக்கொடுமையை கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் ஆழமாக உணரவும், பல்வேறு நிலைகளில் இந்த கொடுமையைத் தடுக்கும் வழிகளை ஆய்வு செய்யவும் இந்தக் கருத்தரங்கு கூட்டப்பட்டது என்று கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த இங்கிலாந்து ஆயர் Patrick Lynch கூறினார்.
சட்டத்திற்குப் புறம்பாக உலகில் நடைபெறும் வர்த்தகங்களில், போர்கருவிகளின் வர்த்தகம் முதல் இடத்திலும், மனித வர்த்தகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்று ICN என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.