2012-05-08 15:43:00

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 120


RealAudioMP3 இசைக்கும், பாடல்களுக்கும் மனித வாழ்வில் உள்ள முக்கிய இடத்தை நாம் அனைவரும் அறிவோம். குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுகிறோம், உடல் உழைப்பை மறக்கப் பாடுகிறோம். மகிழ்வில் பாடுகிறோம், துயரிலும் பாடுகிறோம். ஆலயங்களில் பாடுகிறோம், மேடைகளில் பாடுகிறோம், நண்பர்கள் கூட்டத்தில் பாடுகிறோம், தனிமையில் இருக்கும்போதும் பாடுகிறோம். பொதுவாக, உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த, அல்லது உள்ளத்தில் உணர்வுகளை வளர்க்க நாம் பாடல்களைப் பயன்படுத்துகிறோம்.
புனிதத்தலங்களை நோக்கிப் பயணம் செய்பவர்கள் பாடல்களைப் பாடுவது எல்லா மதங்களிலும் காணப்படும் ஒரு மரபு. வேளாங்கண்ணி திருத்தலம் நோக்கிச் செல்லும்போதும், சபரிமலைக்குச் செல்லும்போதும் பக்தர்கள் பாடிக்கொண்டே செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட அனுபவம் நமக்கும் இருந்திருக்கும். திருத்தலம் நோக்கி நடக்கும்போது தோன்றும் களைப்பை மறக்கவும், இறைவனைக் காண வேண்டும் என்று நாம் எடுத்துக் கொண்ட முயற்சியை மீண்டும், மீண்டும் நமக்கு நினைவுறுத்தவும் நமது பாடல்கள் உதவியாக இருந்திருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் அசைபோட இன்றைய விவிலியத் தேடல் நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

எருசலேம் கோவிலை நோக்கி ஆண்டொன்றுக்கு மூன்று முறை திருப்பயணம் செல்ல வேண்டும் என்பது இஸ்ரயேல் மக்களுக்கு வகுக்கப்பட்ட கடமை. இத்திருப்பயணத்தில் அவர்கள் பயன்படுத்திய பாடல்கள் திருப்பாடல் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 120 முதல் 134 முடிய உள்ள 15 திருப்பாடல்கள் சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
12 வயது நிறைந்த அனைத்து இஸ்ரயேல் குலத்தவரும் எருசலேம் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்ற கடமை இருந்தது. இயேசுவும் தனது 12வது வயதில் இந்தப் பயணத்தைச் செய்தார் என்பதை லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம் (லூக்கா 2:41-42). இந்தப் பயணங்களின்போது இயேசு பயன்படுத்திய திருப்பாடல்களை நாம் இன்று சிந்திக்கிறோம் என்பதே அழகான ஓர் எண்ணம்.

நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது, ஒரு மேசை அல்லது நாற்காலியில் நம் கால் இடித்துவிட்டால்... அல்லது, வீட்டுப் படிகளில் நாம் கொஞ்சம் தடுமாறினால்... நம்மில் பலர் மீண்டும் வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் அமர்வோம், தண்ணீர் குடிப்போம். பின்னர் நம் பயணத்தைத் துவக்குவோம். அதேபோல், வீட்டிலிருந்து கிளம்பும்போது தடங்கல்கள் ஏதும் இல்லாமல், நல்லவைகளே நடக்கவேண்டும் என்ற எண்ணங்களுடன் கிளம்புவோம். அந்த நேரத்தில் யாராவது எதிர்மறை எண்ணங்களைப் பேசினால், அதைத் தடுக்க முயற்சிப்போம். இவை எல்லாம் நம்மிடம் உள்ள பழக்கங்கள்.
பொதுவாகவே பயணங்களின்போது தடங்கல்கள் இருக்கக்கூடாது என்ற எண்ணங்கள் உள்ள நாம், திருத்தலம் நோக்கி ஆரம்பிக்கும் பயணத்தில் இன்னும் அதிக கவனம் எடுப்போம். இறைவனின் ஆலயம் நோக்கித் துவங்கும் பயணத்தில் முதலில் நாம் என்ன பாடுவோம்? இறைவனைப் புகழ்ந்து பாடுவோம்.
சீயோன் மலைத் திருப்பயணங்கள் என்ற வரிசையில் முதலில் காணப்படும் திருப்பாடல் 120ல் நாம் வாசிக்கும் வரிகள் வித்தியாசமாக ஒலிக்கின்றன. உள்ளத்தில் கேள்விகளை எழுப்புகின்றன. திருப்பயணத்தின் முதல் பாடலில் துயரமான எண்ணங்களைக் கூறும் வார்த்தைகளே அதிகம் ஒலிக்கின்றன. இதோ அப்பாடலில் காணப்படும் ஒரு சில வரிகள்:

திருப்பாடல் 120
உதவிக்காக மன்றாடல் - (சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்)
நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்: அவரும் எனக்குச் செவி சாய்த்தார். ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும். வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்! ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும், சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. நான் சமாதானத்தை நாடுவேன்: அதைப் பற்றியே பேசுவேன்: ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!
திருப்பயணத்தின் துவக்கத்தில் ஏன் இப்படிப்பட்ட ஒரு பாடலை ஆசிரியர் பாடுகிறார் என்ற கேள்வி எழலாம். ஆசிரியரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முயல்வோம், பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

பொய் பேசும் வாயினின்று, வஞ்சக நாவினின்று தம்மைக் காக்கும்படி மன்றாடுகிறார் ஆசிரியர். சமாதானத்தைக் குலைப்பவர்களைப் பற்றி, போர் ஒன்றிலேயே நாட்டம் கொண்டவர்களை பற்றி அவர் பேசுகிறார்.
ஒரு கோணத்தில் பார்க்கும்போது, புனிதத்தலம் நோக்கி மேற்கொள்ளும் ஒரு பயணத்தின் துவக்கத்தில் இதுபோன்ற பாடலைப் பாடுவது சரியல்ல என்று தோன்றுகிறது. மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, இப்படிப்பட்ட பாடலைப் பாடுவது சரியென்றும் தோன்றுகிறது.
நாம் மேற்கொள்ளும் எல்லா பயணங்களுமே மகிழ்வுடன் மேற்கொள்ளப்படும் பயணங்கள் அல்லவே. எடுத்துக்காட்டாக, நம் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்று வைத்துக் கொள்வோம். அவருக்குத் தேவையான மருத்துவ உதவியைத் தேடி நாம் ஒரு பெருநகருக்குச் செல்லவேண்டும் என்றும் வைத்துக் கொள்வோம். அந்த நகர் நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்திற்குமுன், நோயுற்றவரின் குறிப்புக்கள் அடங்கிய அனைத்து விவரங்களையும் எடுத்துச் செல்கிறோம் அல்லவா? இந்தக் கோணத்தில், இறைவனின் திருத்தலம் நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தையும் பார்க்கலாம்.
புனிதத்தலம் நோக்கி மேற்கொள்ளும் பல பயணங்களின் பின்னணியாக, உள்ளத்தில் பல வேண்டுதல்களை நாம் சுமந்து செல்கிறோம். வாழ்வில் நாம் அனுபவிக்கும் குறைகள் இந்த வேண்டுதல்களின் அடிப்படை. இக்கோணத்திலிருந்து இத்திருப்பாடலை நோக்கினால், ஆசிரியரும் தன் திருப்பயணத்தின் துவக்கத்தில் தன் வேண்டுதல்களை இறைவனை நோக்கி எழுப்புவதை உணரலாம். திருப்பயணத்தை ஆரம்பிக்கும்போது தனது அன்றைய நிலையை ஆசிரியர் எண்ணிப்பார்க்கிறார். அவர் இருந்த நிலையில் அவரை, பொய், வஞ்சகம், பகை, போர் ஆகியவை சூழ்ந்திருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

"நான் இன்னலுற்ற வேளையில்" என்ற வார்த்தைகளுடன் ஆரம்பித்து, "அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்" என்ற வார்த்தைகளுடன் இத்திருப்பாடல் முடிகிறது. இத்திருப்பாடலில் கூறப்பட்டுள்ள பாரமான, இறுக்கமான எண்ணங்களை நாம் ஒவ்வொருவரும் பல வேளைகளில் பல்வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறோம்.
பொய் பேசும் வாய், வஞ்சக நாவு - இவ்விரண்டையும் மையப்படுத்தி இத்திருப்பாடலை எழுதியுள்ளார் ஆசிரியர். ஆங்கிலத்தில் இவை lying lips, deceitful tongues என்று குறிக்கப்பட்டுள்ளன... அதாவது, பொய்பேசும் உதடுகள், வஞ்சக நாவுகள் என்று சொல்லப்பட்டுள்ளன. நமது வாயினின்று வார்த்தைகளை வெளிப்படுத்த உதடுகளும், நாவும் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டும் இயங்கவில்லை என்றால், வார்த்தைகள் வாயினின்று வெளிவராது. ஒருவேளை உலகில் இவ்வளவு பிரச்சனைகளும் இருந்திருக்காது. அப்படித்தானே? ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், உதடுகள் மீதும் நாவின் மீதும் நாம் பரிதாபப் படவேண்டியிருக்கும்.

உதடுகளையும், நாவையும் எண்ணிப்பார்க்கும்போது இரு உண்மைகள் மனதில் தோன்றுகின்றன. முதல் உண்மை... இவ்விரு உறுப்புக்களுக்கும் எலும்புகள் கிடையாது. எனவே, இவ்விரண்டும் எவ்வகையில் புரண்டாலும் இவைகளுக்கு எவ்வகைப் பாதிப்பும் இல்லை. வாய் வார்த்தைகளால் பல மனங்களை உடைக்கும் இவ்விரு உறுப்புக்களுக்கும் எலும்புகள் கிடையாது என்பதால், உடைவதற்கும் வாய்ப்பில்லை.. இரண்டாவது உண்மை... வார்த்தைகளின் பிறப்பிடம் நாவோ, உதடுகளோ அல்ல. அவை வார்த்தைகளை வெளிப்படுத்தும் கருவிகள் மட்டுமே. வார்த்தைகளின் பிறப்பிடம் மனம், எண்ணம். ஆனால், நாம் பேச்சுவழக்கில் நமது நாவையே அடிக்கடி குறை சொல்கிறோம். "நாவினால் சுட்ட வடு" ஆறாது என்பது வள்ளுவரின் வார்த்தைகள்.

விவிலியத்தின் பல பகுதிகள் பொய்மையைப் பற்றிப் பேசுகின்றன. திருப்பாடல்களிலேயே 12 பாடல்களில் பொய்மையைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல்களில் எல்லாம் நாவும், வாயுமே குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளன. இதோ 31, 52, 59, ஆகியத் திருப்பாடல்களின் வரிகள்:

திருப்பாடல் 31 18
பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா கட்டுண்டு கிடப்பதாக!

திருப்பாடல் 52 2,4
உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ! நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே!

திருப்பாடல் 59 12
அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே.

இந்த வரிகளில் நாவும், வாயும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம். எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு என்று தெரிந்தும், இதே குற்றச்சாட்டை நாம் அடிக்கடிச் சொல்கிறோம். "பொய் பேசும் நாவு அழுகிவிடும்" என்று சொல்கிறோமே தவிர, "பொய் பேசும் மனம் அழுகி விடும்" என்று நாம் சொல்வதில்லை.

நமது தீமைகளின் பிறப்பிடம் நாவும் வாயும் அல்ல, மனமே என்று மத்தேயு நற்செய்தியில் இயேசு தெளிவாக்குகிறார்.

மத்தேயு 15: 18-20
வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.

தீமைகள், பொய்மை, வஞ்சகம் இவை நம்மில் பெருகுவதற்கு என்ன காரணம் என்பதை இன்னும் ஒரு படி மேலே சென்று நாம் தேடுவதற்கு இன்றைய திருப்பாடல் உதவியாக உள்ளது. பொய்மைக்கும், வஞ்சகத்திற்கும் நமது மனமும் எண்ணங்களும் முழுப் பொறுபேற்க முடியாது. நாம் வளரும் சூழல், நமது உறவுகள், நண்பர்கள் என்று பல காரணங்கள் உள்ளன. இந்த எண்ணத்தை 120ம் திருப்பாடலின் இறுதி இரு வரிகளில் ஆசிரியர் கூறுகிறார்:
சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று... அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!

120ம் திருப்பாடலின் பெரும்பகுதி மனித வாழ்வின் இருளானப் பகுதிகளைப் பற்றி பேசினாலும், ஆங்காங்கே ஒளி கீற்றுகளாய் நம்பிக்கைச் சொற்களும் காணப்படுகின்றன. வஞ்சகமும், பொய்மையும் முள் கம்பிகளாய், இரும்பு வலைகளாய் நம்மைக் கட்டிப் போட்டாலும், அவற்றிலிருந்து விடுதலை பெற்று, இறைவனை நோக்கி நமது வாழ்வுப் பயணத்தைத் தொடர, இத்திருப்பாடலின் வரிகள் நமக்குத் துணை புரியட்டும். ஆறுதல்தரும் இவ்வார்த்தைகளுடன் இன்றையத் தேடலை நாம் நிறைவு செய்வோம்.
திருப்பாடல் 120: 1,7
நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்: அவரும் எனக்குச் செவி சாய்த்தார்... நான் சமாதானத்தை நாடுவேன்: அதைப் பற்றியே பேசுவேன்








All the contents on this site are copyrighted ©.