2012-05-07 15:50:03

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கை ஆயர்கள் கோரிக்கை


மே,07,2012. இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்துக்கான நல்ல வாய்ப்பையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக பாராட்டியுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள், மற்றுமொரு அரிய வாய்ப்பு தவறிப்போவதைத் தவிர்ப்பதற்காக இலங்கை அரசு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அமைதியும் நல்லிணக்கமும், மிகவும் முக்கிய, அவசரத் தேவையாக இருக்கின்ற நிலையில், அந்த ஆணைக்குழுவின் சாத்தியமிக்கப் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இலங்கை ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் நோக்கில் குறைந்த அளவு அடையாள அளவிலான நடவடிக்கைகளையாவது அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ள ஆயர்கள், இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மக்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் அவை இரு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் எல்லாருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளனர்.
சிங்களம் மாத்திரம் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி, மொழி விவகாரங்களை மிகவும் முக்கியமாகக் கருதி, அரசு செயலாற்றவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், காணாமல் போனவர்களின் விவகாரத்தை அரசு நன்முறையில் கையாள வேண்டும் என்றும், இன்னமும் அரசு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை முழுமையாக வெளியிடுவதன் மூலம், மக்கள் தமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா, இல்லாவிட்டால், அவர்கள் எப்போது உயிரிழந்தார்கள் என்பதையாவது அறிந்துகொள்ள முடியும் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
நடைமுறைப்படுத்தப்படக்கூடிய பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு ஒரு பொறுப்பான குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.